அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் அமைந்திருக்கும் நிவார்க் நகர நிர்வாகத்தை ஏமாற்றியதாக நித்தியானந்தா மற்றும் அவரின் நாடாகக் கூறப்படும் கைலாசா மீது புகார் எழுந்திருக்கிறது. ஜனவரி 12-ம் தேதி, நிவார்க் சிட்டி ஹாலில் நடைபெற்ற கூட்டத்தில், நகர மேயர் ரஸ் ஜெ பராக்கா, கைலாசா நாட்டின் பிரதிநிதியான விஜய்பிரியா நித்தியானந்தா இருவருக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அமெரிக்காவிலுள்ள சமூகங்களுக்கும், பிற நாடுகளிலுள்ள சமூகங்களுக்குமிடையே இருக்கும் கலாசார வேறுபாடுகளை அறிந்துகொள்ளும்விதமாக ‘சிஸ்டர் சிட்டிஸ்’ என்ற அமைப்பின்படி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிலையில் ஜெனீவாவில் சமீபத்தில் ஐ.நா அமைப்பின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ‘கைலாசா குடியரசு’ சார்பில் நித்தியானந்தாவின் பிரதிநிதிகளாகப் பெண்கள் சிலர் பங்கேற்றனர். அது தொடர்பான புகைப்படங்களை நித்தியானந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அந்தப் புகைப்படங்கள் பின்னர் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின.
அவரின் சிஷ்யர்கள் சிலர் தங்கள் நாட்டை ஐ.நா-வே அங்கீகரித்துவிட்டது என்று கூறிக்கொண்டனர். பின்னர் இது தொடர்பாக, “ஐ.நா நடத்தும் கூட்டங்களில் எந்த அமைப்பினர் பேச முன்வந்தாலும், அவர்களை அனுமதிப்போம். அதற்காக அவர்களை ஐ.நா அங்கீகரித்துவிட்டது என்று அர்த்தமில்லை” என்று ஐ.நா விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
`சிஸ்டர் சிட்டிஸ்’ ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா, கைலாசா நாட்டை அங்கீகரித்துவிட்டதாக நித்தியானந்தாவின் சீடர்கள் கூறிவந்த நிலையில், அந்த ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டிருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘கைலாசா குடியரசு’ உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட நாடு அல்ல என்பதை உணர்ந்த நிவார்க் நகர மேயர், இந்த ஒப்பந்தம் ரத்துசெய்யப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார். கைலாசா நாட்டின் பிரதிநிதிகளால், நிவார்க் நகரம் ஏமாற்றப்பட்டதை நிவாக் நகர மேயர் ரஸ் ஜெ பராக்கா ஒப்புக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நிவார்க் நகரம்போல் அமெரிக்காவின் 30 நகரங்களுடன் கைலாசாவின் பிரதிநிதிகள் ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பது தெரியவந்திருக்கிறது. பல்வேறு புகார்களில் சிக்கிய நித்தியானந்தா, இந்தியாவைவிட்டு தப்பிச் சென்று, 2019-ம் ஆண்டு `கைலாசா’ என்னும் நாட்டை நிறுவிவிட்டதாக அறிவித்தார். நித்தியானந்தா, தற்போதும் இந்தியாவில் தேடப்பட்டுவரும் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
Author: ந.நீலம் இளமுருகு