தேனி: ஒரு மணி நேரத்தில் ரயில் மோதி இருவர் பலி; வேதனையில் முடிந்த சோதனை ரயில் ஓட்டம்!

6

​தமிழகத்தில் ரயில் போக்குவரத்து இல்லா​மல் இருந்த தேனி மாவட்டத்துக்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு, ரயில் சேவை தொடங்கியிருக்கிறது. ​மதுரை-போடி இடையே 90.4 கிலோமீட்டர் தூரத்துக்கு மீட்டர்கேஜ் பாதை அகற்றப்பட்டு, அகல ரயில்பாதை அமைக்கும் பணிக்காக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து இந்தத் திட்டத்துக்கு ரூ.592 கோடி நிதி​யில்​ மதுரை-உசிலம்பட்டி, இரண்டாம் கட்டமாக உசிலம்பட்டி-ஆண்டிபட்டி… மூன்றாம் கட்டமாக ஆண்டிபட்டி-தேனி எனப் படிப்படியாகப் பணிகள் முடிக்கப்பட்டு 11 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மே மாதம் முதல் மதுரை-தேனி இடையே ரயில் இயக்கப்பட்டுவருகிறது. 

ரயில்

​நான்காம் கட்டமாக தேனி-போடி இடையே பாதை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு ரயில் இன்ஜின் இயக்கிப் பார்க்கப்பட்டது. ​விரைவில்​ மதுரை-போடி வரை ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.​ ​இதற்கிடையே, தேனி முதல் போடி வரையிலான ​​பணிகள் ​முடிந்து ஆய்வுக்காக அவ்வப்போது மதுரையிலிருந்து ரயில் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், ​​வழக்கமான ஆய்வுப் பணிக்காக மதுரையிலிருந்து மூன்று பெட்டிகளுடன் போடிக்கு வந்த​ ​ரயில் மோதி அடுத்தடுத்து இருவர் பலியாகியிருக்கின்றனர்.

​தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரைப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (19). இவர் இன்று மாலை தேனி மதுரை சாலையிலுள்ள தனியார்ப் பள்ளி எதிரே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, போடிநாயக்கனூரிலிருந்து மதுரைக்குச் சென்ற சோதனை ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து வந்த ரயில்வே போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

பலி

அதேபோல, ஒரு ​மணி நேரத்துக்கு முன்பு மதுரையிலிருந்து போடிக்கு சோதனைக்காக தேனி வழியாக வந்த இதே ரயில் பங்களா மேடு, அண்ணா நகரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ஆண்டிபட்டி கணேசபுரத்தைச் சேர்ந்த லட்சுமி (45) என்ற பெண்மீது மோதியதில், அவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.

ஒரு​ ​மணி நேரத்தில் சோதனைக்காக வந்த ரயில் மோதி, அடுத்தடுத்து இருவர் பலியான சம்பவம் தேனி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Author: மு.கார்த்திக்

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.