திருப்பதி : திருப்பதி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று டயல் யுவர் கமிஷனர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆணையர் அனுபமா அஞ்சலி, துணை மேயர் முத்ரா நாராயணா உள்ளிட்ட அதிகாரிகள் பொது மக்கள் அளித்த புகார்களை அதிகாரிகள் பெற்று, அவற்றைத் தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை வழங்கினர். இதில், திருப்பதி நகரில் அலிபிரி கபிலதீர்த்தம் சாலை நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளதால் வாகனங்களை நிறுத்துவதில் சிரமம் ஏற்படுவதாக புகார்கள் வந்தது. அது குறித்து மாநகராட்சி ஆணையாளர் உடனடியாக சம்பந்தப்பட்ட இடங்களில் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வீடுகளில் குப்பை பெற்றுச்செல்லும் வாகனங்களின் ஸ்பீக்கர் வேலை செய்யாததால் வண்டி வந்ததே தெரியாமல் சிரமமாக உள்ளதால், குப்பை வண்டியின் ஸ்பீக்கர்கள் வேலை செய்ய, அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தும்படி கொட்டகொம்மல தெருவைச் சேர்ந்த ஒருவர் புகார் தெரிவித்தார். நகராட்சி பூங்கா பின்புறம் உள்ள கங்கம்மா கோயில் அருகே குப்பைகள் கொட்டப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. வார்டு எண் 3ல் உள்ள கைக்காலை குளம் பகுதியில் வசிப்பவர்களுக்கு சாலை, கால்வாய் அமைத்து குடிநீர் வசதி செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதேபோல நகர் காலனி 5வது கிராஸில் சாலை மற்றும் வடிகால் வசதி கோரிக்கை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. மேலும் அதிகாரிகள் புகார்களை உடனடியாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி ஆணையாளர் உறுதியளித்தார். நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர் சுனிதா, கண்காணிப்பு பொறியாளர் மோகன், வருவாய் அலுவலர் கே.எல்.வர்மா, சுகாதார அலுவலர் டாக்டர் ஹரிகிருஷ்ணா, மேலாளர் சிட்டிபாபு உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பதி மாநகராட்சியில் நடைபாதையை ஆக்கிரமித்து மக்களுக்கு சிரமம் ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை-அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவு
Advertisement
Advertisement