திரிபுரா மாநிலத்தில் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்தபோது, பா.ஜ.க எம்.எல்.ஏ ஜாதவ் லால் நாத் என்பவர் தனது மொபைல் போனில் ஆபாச வீடியோ பார்த்துக்கொண்டிருந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டுவருகிறது. அவர் மொபைல் போனில் ஆபாச வீடியோ பார்த்துக்கொண்டிருந்தபோது, பின் வரிசையில் இருந்த யாரோ வீடியோ எடுத்து அதை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
சட்டமன்றத்தில் மற்ற உறுப்பினர்களும், சபாநாயகரும் பேசிக்கொண்டிருந்தபோது ஜாதவ் லால் நாத் மட்டும் தனது மொபைல் போனில் ஆபாச வீடியோக்கள் பார்த்துக்கொண்டிருந்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இது பா.ஜ.க-வுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பக்பஸ்ஸா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜாதவ் இது குறித்து, “நான் ஆபாச வீடியோவை வேண்டுமென்றே பார்க்கவில்லை.

எனது போனில் ஒரு கால் வந்தது. அந்த கால் என்னவென்று பார்த்தபோது ஆபாச வீடியோ ஓடிக்கொண்டிருந்தது. அது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது. அந்த வீடியோவை ஆஃப் செய்ய சிறிது நேரம் எடுத்துக்கொண்டது. எதையும் திட்டமிட்டுச் செய்யவில்லை. இந்த விவகாரத்தில் கட்சியும், முதல்வரும் என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தார். சட்டமன்றத்தில் ஆபாச வீடியோ பார்த்த எம்.எல்.ஏ-மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.
இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் பிரஜித் சின்ஹா, “பா.ஜ.க எம்.எல்.ஏ-வின் செயல் அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-வுக்குக் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். சட்டமன்றத்துக்குள் மொபைல் போனுக்கே அனுமதி இல்லை. அப்படி இருக்கும்போது எப்படி ஆபாச வீடியோ பார்க்கலாம்” என்று கேள்வி எழுப்பினார். இது குறித்து சபாநாயகர் பிஸ்வபந்து பேசுகையில், “எனக்கு இது தொடர்பாக இதுவரை எந்தவித புகாரும் வரவில்லை. எத்தனையோ சம்பவங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகிவருகின்றன. எதுவாக இருந்தாலும் முறைப்படி புகார் வந்தால் மட்டுமே அதன்மீது நடவடிக்கை எடுக்க முடியும்” என்று தெரிவித்தார்.
Author: மு.ஐயம்பெருமாள்