சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம்: எதிர்ப்பு தெரிவிக்காத திமுக அரசின் நிலைப்பாடுதான் என்ன?!

7

தமிழக அரசு சேலம் எட்டு வழிச்சாலைக்குச் சுற்றுச்சூழல் அனுமதி கோரியிருப்பது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பினார். அதற்கு அமைச்சர் நிதின் கட்கரி, “தமிழக அரசு அப்படியாக எந்த அனுமதியும் கோரவில்லை. திட்டத்துக்கு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை” என பதிலளித்திருக்கிறார். இந்த பதில் தி.மு.க-வின் எட்டு வழிச்சாலையின் நிலைப்பாடு குறித்தான கேள்வியை எழுப்பியிருக்கிறது.

கடந்த 2018-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில், மத்திய அரசால் எட்டு வழிச்சாலை அறிவிக்கப்பட்டது. இதற்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதை நடைமுறைப்படுத்தினால் 7,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழிக்கப்படும் என்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. எனவே, இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும் ஆறு மாவட்டத்தின் விவசாய அமைப்புகள் இதை எதிர்த்துப் போராட்டம் நடத்தின. இந்தத் திட்டத்தை அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க கடுமையாக எதிர்த்தது.

நிதின் கட்கரி

ஆனால், 2021-ம் ஆண்டு வெற்றிபெற்று ஆட்சி அமைத்தவுடன் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, “வரம்புகள் மீறி விவசாயிகளின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால், நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். சாலை விரிவுபடுத்தும் திட்டங்களுக்கு தி.மு.க என்றும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” எனப் பேசினார். மேலும் சட்டமன்றத்தில் எட்டு வழிச்சாலையை, ஆறு வழிச்சாலையாக மாற்றி திட்டம் செயல்படுத்த இருப்பதாகக் கூறியதும் சர்ச்சையானது.

எட்டு வழிச்சாலைத் திட்டம்

திட்டம் எந்த வகையில் கொண்டுவரப்பட்டாலும் விவசாய நிலம் கையகப்படுத்தினால், நிச்சயம் எதிர்ப்பு கிளம்பும். தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண் 43-ல், ”விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல், விளைநிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதைத் தடுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு, விளைநிலங்கள் பாதுகாக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தி.மு.க-வின் நிலைப்பாடுகளின் இந்த அறிவிப்புகள், அவர்கள் தேர்தல் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதோ என்னும் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது.

இது தொடர்பாக தமிழக பா.ஜ.க கட்சியின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பேசியதாவது, “இரட்டை வேடம் போடுவது தி.மு.க-வுக்குக் கை வந்த கலை. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஓர் அறிவிப்பு, அதை ஆளுங்கட்சியாக மாறியபின் முற்றிலுமாக மாற்றுவதுதான் தி.மு.க-வின் வாடிக்கை. காரணம், எட்டு வழிச்சாலையின் தேவை ஆளுங்கட்சியாக மாறிய பிறகுதான் அவர்களுக்கு உரைத்திருக்கிறது.

எட்டு வழிச்சாலை அமைக்க திட்டமிட்டபோது, மக்களிடம் எதிர்ப்பு கிளம்பாத நிலையில், சமூக விரோத சக்திகளைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்தியது தி.மு.க-வினர்தான். அந்த வகையில் நிதின் கட்கரி, தி.மு.க எட்டு வழிச்சாலையை எதிர்ப்பதாகக் காட்டிய பிம்பத்தை உடைத்துவிட்டார். மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் அ.தி.மு.க இணைந்தபோது விமர்சித்தவர்கள், ஆளுங்கட்சியாகப் பொறுப்பேற்ற பிறகு அதை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் ஏற்றுக்கொண்டதைத் தவறு சொல்லவில்லை. ஆனால், இந்த மாற்று நிலைப்பாடுகள் ஏன் என்பதே எங்களின் கேள்வி. தவிர, தி.மு.க சட்டமன்றத்தில் அறிவித்ததுபோல் ஆறு வழிச்சாலையாக மாற்ற முடியாது. மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டும் என்பதற்காகப் பொய் சொல்லி நிலைப்பாட்டை மாற்றிவருகிறது தி.மு.க” எனச் சாடினார்.

நாராயணன் திருப்பதி

இது குறித்து அ.தி.மு.க வழக்கறிஞர் பாபு முருகவேலிடம் பேசினோம். அவர், “ஒரு மாநிலம் வளர்ச்சியடைய வேண்டுமெனில், புதிய திட்டத்தை உருவாக்க வேண்டியது அவசியம். ஆனால், அ.தி.மு.க ஆட்சியில் மத்திய அரசு கொண்டுவந்த எட்டு வழிச்சாலை திட்டத்தை, ’எடப்பாடி பழனிசாமி வீட்டிலிருந்து சென்னைக்கு ரோடு போடுவதாக’ தவறான பரப்புரையை மேற்கொண்டனர். ஆனால், அந்தத் திட்டத்தை தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு கையில் எடுத்து நடைமுறைக்குக் கொண்டு வர திட்டமிடுகின்றனர். அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது, விவசாயிகள், மக்களைத் தூண்டிவிட்டு போராட்டத்தை நடத்தினர். ஆனால், இப்போது மக்கள் இதற்கு உண்மையாக எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு, வளர்ச்சித் திட்டத்தைக் கொண்டுவரும்போது விவசாய நிலங்கள் அழியத்தான் செய்யும் எனப் பேசுவது கண்டனத்துக்குரியது.

பாபு முருகவேல்

‘எங்கள் நிலத்தை முழுவதும் அழிக்கிறது, அதனால் பரந்தூர் விமானம் நிலையம் வேண்டாம்’ எனச் சொல்வதைக் கேட்டும் வளர்ச்சி என்பதைக் காரணம் காட்டி திட்டத்தைத் திணிக்கின்றனர். அதைத்தான் எட்டு வழிச்சாலைத் திட்டத்திலும் செய்கின்றனர். திட்டங்களைக் கொண்டுவரும்போது மக்கள் எதிர்ப்பது இயல்புதான். ஆனால், அதைப் புரியவைத்து திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். ஆனால், தி.மு.க-வைப் பொறுத்தவரை திட்டம் வேண்டும். ஆனால், எதிர்ப்பே வரக் கூடாது எனச் சொல்வதில் நியாயமில்லை.

அ.தி.மு.க ஆட்சியில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்திதான் நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கினோம். ஆனால், அதற்கு எதிர்மறையான விஷயங்களைப் பரப்பிவருகின்றனர். சரி இவர்கள் சொல்வதுபோல் நாங்கள் முறையாக ஆட்சி செய்யவில்லை என வைத்துக்கொள்வோம். தற்போது, ஆட்சி அமைத்திருக்கும் தி.மு.க எல்லாத்தையும் சரியாகச் செய்ய வேண்டியதுதானே. மக்கள் எதிர்ப்பை மீறி திட்டத்தை எதற்காகக் கொண்டுவருகின்றனர். இரட்டை வேடம் போட மட்டுமே தி.மு.க-வுக்குத் தெரியும். திட்டத்தை முறையாக நிறைவேற்ற அவர்களுக்குத் தெரியாது” என்றார்.

சிவ ஜெயராஜ்

இது குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் சிவ ஜெயராஜிடம் விளக்கம் கேட்டோம். அவர், “எட்டு வழி சாலையைத்தான் தி.மு.க எதிர்த்தது. சாலை அமைப்பதை தி.மு.க எதிர்க்கவில்லை. எட்டு வழிச்சாலை அமைத்தால் விவசாய நிலங்கள், மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அதை ஆறு வழிச்சாலையாக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம். அவர்கள் அறிவித்த எட்டு வழிச்சாலைபோல் இந்த ஆறு வழிச்சாலை அமையாது. திட்டமுறையே முற்றிலுமாக மாற்றப்படும். அதற்கான அறிவிப்பை 2022-ம் ஆண்டு நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அறிவித்தார். ஆனால், அதற்கான ஒப்புதல் இன்னும் பெறப்படவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அது விசாரணைக்கு வந்து, தமிழக அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உத்தரவு வர வேண்டும்.

கடந்த ஆட்சியில் மக்களிடம் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை. ஆனால், தி.மு.க ஆட்சியில் ஆறு வழிச்சாலை அமைக்க திட்டம் தொடங்கப்பட்டால், மக்களிடம் நிச்சயம் கருத்து கேட்கப்படும். திட்டத்துக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டால் மட்டும்தான் திட்டம் செயல்படுத்தத் தொடங்கிவிட்டதாக அர்த்தம். ஆனால், அதை இன்னும் தி.மு.க அரசு தொடங்கவில்லை. ஆரம்பக்கட்டப் பணியில்தான் இருக்கிறது. அது பற்றி இப்போது பேசத் தேவையில்லை. தி.மு.க அரசு எட்டு வழிச்சாலைக்குத்தான் எதிராக நின்றதே தவிர சாலை அமைப்பதற்கு அல்ல” என முடித்துக்கொண்டார்.

 

Author: நிவேதா த

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.