சென்னை உட்பட பல மாவட்டங்களில், கோடைக்கு முன்பாக இப்போதே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், சென்னையின் பல இடங்களில் திடீரென இன்று காலை முதல் மழை பெய்துவருகிறது. குறிப்பாக, வேளச்சேரி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இவ்வாறு சென்னையின் அனலை இந்த மழை தணித்துவருவதால், மக்களும் கொஞ்சம் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பல இடங்களில் அடுத்த மூன்று நாள்களுக்கு மழை இருக்கக்கூடும் என இந்திய வானிலை மையம் கூறியிருக்கிறது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக 17-03-2023 முதல் 20-03-2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21-03-2023 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் சென்னையைப் பொறுத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன்கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன்கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்” எனக் கூறப்பட்டிருக்கிறது.
Author: சி. அர்ச்சுணன்