சீர்குலைக்க முடியாது

12

‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, தேனி மாவட்டங்களின் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சட்டம்- ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக்கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், சமூக ஊடகங்கள் மூலமாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இடையே ஜாதி மோதல்களை தூண்டும் வகையில் செயல்படும் நபர்களையும், வாட்ஸ் அப் குழுக்களையும் கண்காணித்து உடனுக்குடன் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.  கடந்த ஆட்சியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு, மக்கள் மீது துப்பாக்கி சூடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் அதிகளவில் இருந்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அதிரடி நடவடிக்கையால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது. அரசின் செயல்பாடு குறித்து குறை சொல்ல முடியாததால், மக்கள் இடையே கலவரத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக, தென்மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க பல்வேறு முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை.  போதைப்பொருள் விற்பனை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, கஞ்சா வியாபாரிகளின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் சிறிய பிரச்னை கூட ஏற்படாத வகையில் காவல்துறையினர் மிக சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக சிலர் தங்களின் இருப்பை காட்டிக்கொள்ள அவ்வப்போது பிரச்னையை தூண்டும் வகையில் பேசி வருகின்றனர். கருத்துரிமைக்கும் எல்லை உண்டு என்பதை அவர்கள் அழுத்தமாக புரிந்து கொள்ள வேண்டும். அரசியலில் அவர்களால் கால்பதிக்க முடியவில்லை. இதனால் வேறுவழியின்றி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இடையே ஜாதி மோதல்களை தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் அவதூறுகளை பரப்பி வருகின்றனர். மேலும், வாட்ஸ் அப்பிலும் பரப்பப்படுகின்றன. குறிப்பாக, பிரச்னை ஏற்படுத்தும் வகையில் உள்ள பழைய வீடியோக்களை திடீரென சமூக ஊடகங்களில் பரப்புகின்றனர். உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பினால் உடனே அவர்களை கைது செய்ய வேண்டியது கட்டாயம். பொய்யான தகவல்கள் மூலம் மக்கள் இடையே கலவரத்தை ஏற்படுத்தவும், சிறிய பிரச்னைகளை ஜாதி பிரச்னையாக மாற்றவும் அவர்கள் முயற்சிக்கின்றனர்.பொய்கள் மூலம் அவர்கள் அரசியல் செய்ய நினைக்கின்றனர். அது தமிழ்நாட்டில் நடக்காது. மக்களை சந்தித்து அவர்களின் ஆதரவை பெற முடியாததால், விரக்தியில் அவர்கள் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். சமூக ஊடகங்கள் மூலம் மக்கள் இடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு வெறுப்புணர்வுகளை பரப்பி வருகின்றனர். அவர்களின் எந்த திட்டமும் பலிக்காது. கடந்த ஆட்சியாளர்களுடன் கைகோர்த்து கொண்டு, பிரச்னையை ஏற்படுத்த சிலர் எண்ணுகின்றனர். மக்களின் மீது பாசம் இருப்பது போல் அவர்கள் நாடகமாடி வருகின்றனர். அவர்களின் உண்மையான நோக்கம், தமிழ்நாட்டு மக்கள் இடையே பிரச்னையை ஏற்படுத்துவது தான். அவர்களின் நாடகம் தமிழ்நாட்டில் எடுபடாது. இருந்தாலும், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் முயற்சியால் கல்வி, அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் முன்னேற்றம் கண்டு வருகிறது. முக்கியமாக, பொதுமக்களின் ஆதரவால் சட்டம்-ஒழுங்கு மிக சிறப்பாக உள்ளது. அதை யாராலும் சீர்குலைக்க முடியாது.

Author : Dinakaran

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.