சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்; இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை – மகளிர் நீதிமன்றம் அதிரடி

14

ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த செல்வராஜ், நம்பு காளீஸ்வரன் ஆகிய இருவரும், கடந்த 2021-ம் ஆண்டு மதுபோதையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவனை ஏமாற்றி, ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுவனை கட்டாயப்படுத்தி, அடித்து துன்புறுத்தி இருவரும் மாறி மாறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் சிறுவனிடம் இதனை வெளியில் சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டி அனுப்பி உள்ளனர்.

அவர்கள் மிரட்டலுக்கு பயந்து இதனை சிறுவன் வீட்டில் சொல்லாமல் இருந்துள்ளான். இதற்கிடையே சிறுவனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவனின் பெற்றோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு இருப்பது குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம்

அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுதொடர்பாக சிறுவனிடம் விசாரித்தபோது நடந்த சம்பவங்களை கூறியுள்ளான். இதையடுத்து இரு காமகொடூரர்கள் மீதும் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீஸார் செல்வராஜ், நம்பு காளீஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத், குற்றம்சாட்டப்பட்ட செல்வராஜ், நம்புகாளீஸ்வரன் ஆகிய இருவருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

 

Author: கு.விவேக்ராஜ்

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.