தஞ்சாவூர், சாலியமங்கலம் அருகேயுள்ள பூண்டி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா. எம்.காம் பட்டதாரியான இவர், சூழலியல் சுற்றுலா தொடர்பான முனைவர் பட்டத்துக்காக பிஹெச்.டி ஆய்வு மேற்கொண்டுவருவதாகச் சொல்லப்படுகிறது. இயற்கை விவசாயத்தில் ஆர்வம்கொண்ட விக்டர் ஜேம்ஸ் ராஜா, பாரம்பர்ய நெல் ரகங்களைப் பயிரிட்டுவந்தார். விவசாயிகள் மத்தியில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்திவந்தார்.

இந்த நிலையில், 15-ம் தேதி டெல்லியிலிருந்து சி.பி.ஐ., டி.எஸ்.பி சஞ்சய் கெளதம் தலைமையில் வந்த 11 பேர்கொண்ட டீம், விக்டர் ஜேம்ஸ் ராஜாவை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பிரதமர் அலுவலக மெயில் ஐ.டி-க்கு பிரதமர் குறித்து அவதூறு ஏற்படுத்தும் வகையில் விக்டர் ஜேம்ஸ் ராஜா மெயில் அனுப்பியதாகவும், அதற்காகவே அவரிடம் விசாரணை நடைபெற்றுவருவதாகவும் வெளியே தகவல் வெளியானது.
இந்த நிலையில், விக்டர் ஜேம்ஸ் ராஜாவின் பெற்றோரையும் பார்க்க அனுமதிக்காமல், தஞ்சாவூரிலுள்ள மத்திய அலுவலகம் ஒன்றில் வைத்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் விக்டர் ஜேம்ஸ் ராஜாமீது போக்சோ உள்ளிட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். “விக்டர் ஜேம்ஸ் ராஜா, சிறுமிகளின் படங்களை ஆபாசமாகச் சித்திரித்து வீடியோ பதிவுசெய்து இணையதளம் வழியாக வெளிநாட்டுக்கு அனுப்பியிருக்கிறார். சில சிறுமிகளுக்குப் பாலியல்ரீதியான தொல்லை கொடுத்து, மார்பிங் செய்து அவற்றையும் இணையத்தில் பதிவேற்றம் செய்ததாகத் தெரிகிறது.
தகவல் தொழில்நுட்பச் செயல்பாடுகளை கண்காணிக்கக்கூடிய சி.பி.ஐ-யின் பிரிவான தகவல் தொழில்நுட்பப் பிரிவு சி.பி.ஐ போலீஸார் இதைக் கண்டுபிடித்து, அவரின் செயல்பாடுகளைக் கண்காணித்தனர். இதைத் தொடர்ந்து டெல்லியிருந்து சி.பி.ஐ., டி.எஸ்.பி சஞ்சய் கெளதம் தலைமையிலான போலீஸார் தஞ்சாவூருக்குல் வந்து விக்டர் ஜேம்ஸ் ராஜாவைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.

அதில், இது போன்ற செயலில் விக்டர் ஜேம்ஸ் ராஜா ஈடுபட்டது உறுதியானது. அதையடுத்து போக்சோ, தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல், கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் விக்டர் ஜேம்ஸ் ராஜாமீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பதுடன், அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துகின்றனர். இந்த நிலையில், விக்டர் ஜேம்ஸ் ராஜாவின் தந்தை ஜெயபால், `என் மகன் எந்தத் தவறும் செய்திருக்க மாட்டான்’ எனக் கூறிவருகிறார்” என்றனர்.
Author: கே.குணசீலன்