சென்னை: சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு 50,000 ஏக்கரில் சிறுதானிய சாகுபடி மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வேளாண் பட்ஜெட் 2023-24-ஐ அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் அவர் வெளியிட்ட அறிவிப்பு: “கம்பு, கேழ்வரகு, வரகு, சோளம், பனி வரகு, தினை, குதிரைவாலி, சாமை ஆகியவை சிறு, குறு தானியங்கள். சிறு தானியங்கள் வறட்சியிலும் வளர்பவை. வளமற்ற மண்ணிலும் நலம்பெற்று துளிர்ப்பவை. ஊட்டச்சத்து நிறைந்தவை. தமிழ்நாட்டில் அவற்றை மீண்டும் செழிக்கச் செய்யும்பொருட்டும், சிறுதானிய பரப்பு, உற்பத்தி, நுகர்வு ஆகியவற்றை அதிகரிக்கும் பொருட்டும், கடந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் 20 மாவட்டங்களை உள்ளடக்கி அறிவிக்கப்பட்ட இரண்டு சிறு தானிய மண்டலங்களுடன் உழவர்களின் கோரிக்கைகளை ஏற்று, நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்கள் புதிதாகச் சேர்த்துக்கொள்ளப்படும்.
சிறுதானியப் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், நீலகிரி, தருமபுரி மாவட்டங்களிலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்திட கூட்டுறவு சங்கங்கள் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட குறு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு சென்னை, கோயம்புத்தூர் மாநகர அமுதம், சிந்தாமணி, காமதேனு கூட்டுறவு விற்பனை அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு 50,000 ஏக்கரில் சிறுதானிய சாகுபடி மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசின் வேளாண் பட்டிஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Author: செய்திப்பிரிவு