கோவை மாவட்டம், மயிலேறிபாளையம், தேகானி, காரச்சேரி, பெரியகுயிலி, கள்ளப்பாளையம், பச்சாபாளையம், செட்டிப்பாளையம், கிணத்துக்கடவு, மதுக்கரை, காரமடை சுற்றுவட்டாரங்களில் கல்குவாரிகள் அதிகம் இருக்கின்றன. இதில் சில குவாரிகள் மட்டுமே அரசிடம் உரிமம் பெற்று விதிமுறைப்படி இயங்குகின்றன.

மற்ற குவாரிகள் உரிமம் இல்லாமலும், விதிமுறைகளைப் பின்பற்றாமலும் இயங்கி வருகின்றன. இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகளும் வெளியாகியிருக்கின்றன.
இந்த நிலையில், இந்தக் கல்குவாரி தொடர்பான செய்திக்காக தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளர் கிணத்துக்கடவு அருகே சென்றிருக்கின்றனர். அப்போது, `தனியார் நிலத்தில் புகுந்து எப்படி படம் பிடிக்கலாம்’ என மூன்று பேர் கேமராவைப் பறிக்க முயற்சி செய்து, ஒளிப்பதிவாளர் பாலாஜியைத் தாக்கியிருக்கின்றனர்.

அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலாஜியை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தத் தாக்குதலுக்கு அரசியல் கட்சிகள், பத்திரிகையாளர் மன்றங்கள் கடும் கண்டனங்களை பதிவுசெய்து வருகின்றன.
கோவை பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், தாக்குதல் நடத்தியவர்கள்மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

இதனிடையே, பாலாஜிமீது தாக்குதல் நடத்திய கல்குவாரி உரிமையாளர் சிவப்பிரகாஷ், அவரின் உறவினர்கள் உதயகுமார், முத்துகுமார் ஆகியோர்மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவுசெய்திருக்கிறது.
Author: குருபிரசாத்