ஆண்டு தோறும் மார்ச் தொடங்கி ஜூன் மாதம் இறுதி வரை, கோடை வெயில் வாட்டி வதைத்துவிடும். பிப்ரவரி மாதம் இறுதிவரை பனி படர்ந்த சீதோஷ்ண நிலையை அனுபவித்த மக்கள், திடீரென வெயிலின் தாக்கத்தில் நுழைவதால் ஏற்படும் தட்பவெப்ப நிலை மாறுபாட்டால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவர். குறிப்பாக கோடைகால துவக்கத்தில் வெம்மை நோயால் அவதிப்படுவர். சளி, வறட்டு இருமல், காய்ச்சல், தலைவலி போன்ற நோய்கள் தாக்கும். குழந்தைகளுக்கு கோடையில் பரவும் ஒருவித வைரஸ் கிருமிகளால் அம்மை போன்ற நோயும் வரும். கோடைகாலத்துக்கு தகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும். பழங்கள், பழரசங்களை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். மோர் பருக வேண்டும். வெயிலுக்கு தகுந்த கதர் ஆடைகளை உடுத்தினால் அதிகப்படியான வியர்வை, அதனால் ஏற்படும் சரும நோய்களில் இருந்து தப்பித்து கொள்ளலாம். சென்னை போன்ற மக்கள்தொகை, வாகன அடர்த்தி நிறைந்த பரபரப்பான சாலைகளில் கோடை காலத்தின் தாக்கம் ஆக்ரோஷமாய் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள, இப்போது இருந்தே பொதுமக்கள் தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய், பழரசம், குளிர்பானம் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகள் கோடை காலத்தில் கொரோனாவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதிலிருந்து மீண்டு நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் இந்த ஆண்டு கோடைவெயில் தாக்குதல் நடத்த தயாராகிவிட்டது. இயற்கையின் ஆக்ரோஷத்தை அதன் போக்கில் சென்று ஒத்துழைப்பு கொடுத்து தான் சமாளிக்க வேண்டும். வெப்ப சலனம் காரணமாக சில நேரங்களில் கோடைமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. ஆனால், அது பூமியின் சூட்டை மேலழுப்பி மேலும் பல்வேறு நோய்கள் பரவ காரணமாகிவிடுமே தவிர கோடை வெயிலுக்கு ஆறுதலாக அமையாது. இந்த நிலையில், இந்தியாவில் 1901ம் ஆண்டுக்கு பிறகு, கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கோடை காலம் முன்கூட்டியே தொடங்கியுள்ளதாகவும், இந்தியாவில் இந்த மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில், வழக்கத்துக்கு மாறாக வெப்பநிலை உயர்ந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது. வெப்பத்தால் ஏற்படும் உடல் பாதிப்பு குறித்து தினசரி கண்காணிப்பை, அனைத்து மாநிலங்களும் மேற்கொள்ள வேண்டும் என்றும், வெப்பத்தால் ஏற்படும் தாக்கங்கள், வெப்ப அலையால் ஏற்படும் நோய்களை எதிர்கொள்ள ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் அனைத்து மாநில தலைமை செலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். எனவே, மக்கள் நண்பகல் நேரத்தில் அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். குறிப்பாக நோயால் பாதித்தவர்கள், முதியவர்கள் வெயிலில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.
Author : Dinakaran