குமரி: தொடர் திருட்டு, சிறை… ஜாமீனில் வந்து மீண்டும் கைவரிசை – போலீஸுக்குச் சவாலான கொள்ளையன் ஜெகன்

17

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம், திருவட்டாறு, கடையாலுமூடு உள்ளிட்ட போலீஸ் நிலையப் பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடர் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுவந்தன. கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பது, ரப்பர் ஷீட் உலர் கூடங்களை உடைத்து ரப்பர் ஷீட்டுகளைத் திருடிச் செல்வது போன்ற சம்பவங்களால் அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இந்தத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக குலசேகரம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து கொள்ளையனைத் தேடிவந்தனர். விசாரணையில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டது திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த ஜெகன் (வயது 36) என்பது தெரியவந்தது.

இதையடுத்து ஜெகனை போலீஸார் கைதுசெய்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், திருட்டு மூலமாகக் கிடைத்த பணத்தில் குலசேகரத்துக்கு அருகே அரமன்னம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து பெண்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது. ஜெகன் வசித்த வீட்டிலிருந்து எல்.இ.டி டி.வி.. வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் போன்ற பொருள்களை போலீஸார் கைப்பற்றினர். ஜெகன் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர் ஜாமீனில் வெளிவந்திருக்கிறார். கடந்த பல மாதங்களாகத் தலைமறைவாக இருந்த ஜெகன், மீண்டும் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கியிருக்கிறார்.

நேற்று கொள்ளையடிக்கப்பட்ட வீடு

கடந்த சில வாரங்களாக குலசேகரம் பகுதிகளில் ரப்பர் உலர் நிலையங்களில் புகுந்து ரப்பர் ஷீட் திருட்டு, கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் மீண்டும் தொடங்கியது. இது குறித்து போலீஸார் கண்காணிப்பு கேமராக் காட்சிகளை ஆய்வுசெய்தனர். அதில், திருட்டுச் சம்பவங்களில் ஈடுப்பட்டது பழைய கொள்ளையன் ஜெகன் என்பது தெரியவந்தது. ஜெகனைப் பிடிக்க போலீஸார் வலை விரித்தனர். ஆனால், அவரைப் பிடிக்க முடிவில்லை. இதற்கிடையே குலசேகரம் பகுதியில் ரப்பர் உலர் கூடத்துக்குள் நள்ளிரவில் புகுந்த ஜெகன், அங்கிருந்து ரப்பர் ஷீட்டுகளைத் திருட முயன்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த சிலர் ஜெகனைப் பார்த்து சத்தம் போடவே, ரப்பர் ஷீட்டுகளை ஏற்றிச் செல்வதற்காக கொண்டு வந்த காரையும் விட்டுவிட்டு ஜெகன் ஓடி, தப்பித்துவிட்டார். அந்த காரின் பதிவு எண் அடிப்படையில் விசாரணை நடத்தியபோது அது ஜெகனால் திருடப்பட்ட கார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து குலசேகரம் காவல் நிலையம் சார்பில் `திருடன் எச்சரிக்கை’ என்ற தலைப்பில் ஜெகனின் போட்டோவுடன் கடந்த பத்து நாள்களுக்கு முன்பு ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டது. அந்த போஸ்டரில், `இந்தப் புகைப்படத்தில் இருக்கும் ஜெகன், வயது 36, த/பெ அச்சுதன் என்பவர் பல ரப்பர் ஷீட் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டு சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். இவர் மீண்டும் பல இடங்களில் ரப்பர் ஷீட் திருட்டு செய்வதுபோலத் தெரிகிறது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இவரைப் பற்றிய தகவல் சொன்னால் தக்க சன்மானம் வழங்கப்படும்’ என அந்த எச்சரிக்கை போஸ்டரில் கூறப்பட்டிருந்தது.

போலீஸ் ஒட்டிய எச்சரிக்கை நோட்டீஸ்

இந்த நிலையில் போலீஸாருக்கே சவால்விடும் வகையில் ஜெகன் மீண்டும் தனது கொள்ளையை நடத்திவருகிறார். நேற்று திருவட்டாறு காவல் நிலைய எல்லைப்பகுதியிலுள்ள திருவரம்பு பகுதியில் தாசன் என்பவரது வீட்டை உடைத்து உள்ளே சென்று, பீரோவையும் உடைத்து மோதிரம், காப்பு என சுமார் 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. அந்தக் கொள்ளை பாணியைப் பார்க்கும்போது திருடன் ஜெகன் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். போலீஸுக்கே சவால்விடும் கொள்ளையன் ஜெகனைப் பிடிக்க போலீஸார் புதிய வியூகம் வகுத்துவருகின்றனராம்.

 

Author: சிந்து ஆர்

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.