அகமதாபாத்: பிரதமர் அலுவலக அதிகாரி என ஏமாற்றி வந்த கிரணுடன், மகன் தொடர்பு வைத்திருந்ததால், குஜராத் முதல்வர் அலுவலக அதிகாரி பதவியை ஹிதேஷ் பாண்டியா ராஜினாமா செய்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த கிரண் பாய் படேல், பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் இயக்குநராக பணியாற்றுவதாக கூறி, காஷ்மீரின் குல்மார்க் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்றுள்ளார். கிரணை 5 நட்சத்திர உணவு விடுதியில் தங்க வைத்த காஷ்மீர் அரசு, அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பும் கொடுத்துள்ளது. இந்நிலையில், கிரணின் மோசடி வௌிச்சத்துக்கு வரவே, அவர் கடந்த 2ம் தேதி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். கிரணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த மோசடியில் குஜராத் மாநில பாஜ ஐடி பிரிவு நிர்வாகி அமித் ஹிதேஷ், ஜெய் சிதாபரா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அமித் ஹிதேஷின் தந்தை ஹிதேஷ் பாண்டியா கடந்த 20 வருடங்களாக குஜராத் முதல்வர் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதன் காரணமாக கிரண் படேல் வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காஷ்மீர் போலீசார் அதில் அமித் ஹிதேஷ், ஜெய் பெயர்களை சேர்க்காமல், இருவரிடமும் விசாரணை நடத்தி, சாட்சியாக சேர்த்து விட்டு, விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அமித் ஹிதேஷ் பாஜவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஹிதேஷ் பாண்டியா, தனது பணியை ராஜினமா செய்வதாக முதல்வர் பூபேந்திர படேலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “என் மகன் எந்த தவறையும் செய்யவில்லை. ஆனால் பிரதமர், முதல்வர் அலுவலகங்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த விரும்பவில்லை. எனவே என் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் சிக்கியவருடன் மகனுக்கு தொடர்பு குஜராத் முதல்வர் அலுவலக அதிகாரி ராஜினாமா
Advertisement
Advertisement