கள்ளக்குறிச்சி: கடந்த 6 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என சித்தப்பட்டிணம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைக் காவலர்கள் கவலையோடு தெரிவிக்கின்றனர் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷி வந்தியம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தப்பட்டிணம் ஊராட்சியில் தூய்மைக் காவலர்கள் 6 பேர் பணியாற்றுகின்றனர்.
இவர்கள் காலை 7 மணிக்கு பணியை தொடங்கி, ஊராட்சியில் உள்ள குப்பைகளை சேகரித்து 11 மணிக்கெல்லாம் அவற்றை குப்பைக் கிடங்கில் கொட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவர்களுக்கு வாரவிடுப்பும் கிடையாது. இந்நிலையில் இவர்களுக்கு தூய்மைப் பணி மேற்கொள்ளும்போது அணிய வேண்டிய சீருடை, கையுறை, முகக்கவசம் உள்ளிட்டவைகளை ஊராட்சி நிர்வாகம் முறையாக வழங்கு வதில்லை என கூறப்படுகிறது.
குப்பைகளை அள்ளும்போது துர்நாற்றம் வீசுகிறது என்பதால் முகக்கவசம், கையுறை கேட்டும் இதுவரை வழங்கப்படவில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த 6 மாதமாக ஊதியமும் வழங்கவில்லை.
Author: செய்திப்பிரிவு