சென்னை: "மாற்றுத் திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளியின் பங்கு தொகையினை செலுத்துவதற்காக வட்டியில்லா வங்கி கடனுதவி வழங்கும் திட்டம் ரூ.1.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்" என்று மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அமைச்சரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் முக்கிய அறிப்புகளின் விவரம்:
- மாற்றுத் திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளியின் பங்கு தொகையினை செலுத்துவதற்காக வட்டியில்லா வங்கி கடனுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் 1,000 நபர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் ரூ.1.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.
- உயர்கல்வி பயிலும் 1,000 பார்வைத்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தலா ரூ.14,000 மதிப்பில் நவீன வாசிக்கும் கருவி வழங்கும் வகையில் ரூ.1.4 கோடி நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.
- ஒரு கால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 500 பயனாளிகளுக்கு ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
- உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணம், மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவித் தொகையினை உயர்த்தி, கூடுதலாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளியின் பங்கு தொகையினை செலுத்துவதற்காக வட்டியில்லா வங்கி கடனுதவி வழங்கும் திட்டம் ரூ.1.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என்று முதலவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு