தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘மக்கள் முதல்வர்’ என்று அனைவராலும் போற்றப்படுகிறார். இதற்கு காரணம், அவரது எளிமை மட்டுமின்றி சாதாரண குடிமகனும் மிக எளிதில் முதல்வரை சந்திக்க முடியும் என்பதும் தான். இது ஒருபுறம் என்றால் எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் நேரடியாக சென்று மக்களை சந்திக்க கூடியவராகவும் தமிழ்நாட்டு முதல்வர் இருக்கிறார். மக்களின் துயர்களை துடைக்க ஆட்சி அமைப்பதற்கு முன்பும், அமைந்த பின்பும் தீர்க்கமாக சிந்தித்து திட்டங்களை வகுத்து, அதை சிறப்பாக செயலாக்கம் செய்து வருகிறார். இவ்வாறு பல்வேறு திட்டங்களை மக்களுக்காக அறிமுகம் செய்த தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயுள்ளத்துடன் ஏழை மாணவர்களை அரவணைத்த திட்டமே காலை உணவு திட்டம். காலை சிற்றுண்டியை கிராமப்புற ஏழை மாணவர்கள் தவிர்த்து பள்ளிக்கு வருகிறார்கள். இதனால் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்து இன்றைய மாணவர்கள், நாளை நாட்டின் தூண்கள் என்று உணர்ந்து அவர்கள் ஆரோக்கியத்துடனும் அறிவுடனும் பசியின்றி வளர வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் உருவான திட்டமே தமிழக அரசின் காலை உணவு திட்டம். இத்திட்டத்தின் மூலம் 1.48 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்து வரும் நிலையில் நாளுக்கு நாள் பயனடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் சில மாநகராட்சிகள், நகராட்சிகள், கிராம ஊராட்சிகள் மற்றும் மலைப்பகுதிகளில் 1,543 அரசு தொடக்கப்பள்ளிகளில் ரூ.33.56 கோடி செலவில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட காலை உணவு திட்டத்தால் மாணவ, மாணவிகள் சரியான நேரத்துக்கு பள்ளிக்கு வந்துவிடுகிறார்கள். வயிறார சாப்பிட்டு, தமிழ்நாட்டு முதல்வரை மனதார வாழ்த்திவிட்டு வகுப்பறைக்கு சென்று அறிவுப்பசி ஆற்றுகிறார்கள். விரிவாக்கம் செய்யப்பட்ட இத்திட்டத்தால் கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 1,319 பள்ளிகளில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. பல மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவேடு முழு விழுக்காடை எட்டியுள்ளது. தங்கள் பிள்ளைகள் காலை உணவு திட்டத்தில் வயிறார சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு செல்வதை பார்க்கும் பெற்றோர், தமிழ்நாட்டு முதல்வருக்கு ஆனந்த கண்ணீர் மூலம் நன்றியை காணிக்கையாக்கி வருகிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழக மக்களின் முன்னேற்றம், தமிழ் மொழி உயர்வு ஆகியவற்றுக்காகவே தனது நேரத்தை செலவிட்டு அயராது பாடுபட்டுக்கொண்டிருக்கிறார். தமிழ்நாடு முன்னேற்றத்துக்காக அரசு அமல்படுத்தும் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இப்படி கருணை உள்ளத்தோடு ஒவ்வொரு திட்டத்தையும் வகுத்து, அதை செயல்படுத்தி நேரடியாக கள ஆய்வு நடத்தி அரசு திட்டம் கடைக்கோடி மக்கள் வரை சென்றடைந்ததா என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளவராக தமிழ்நாட்டு முதல்வர் இருக்கிறார். இதனால் தமிழ்நாடு உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு வளர்ச்சி பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
Author : Dinakaran