கச்சத்தீவில் திடீரென முளைத்த புத்தர் சிலைகளால் சர்ச்சை… முழு பின்னணி என்ன?!

12

2009 ஈழ இறுதிப்போருக்குப் பின்னர் தமிழர் தாயகங்களான வடக்கு கிழக்கு பகுதிகளில் இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை அதிகரித்தும் புத்தர் கோயில்களைக் கட்டியும் வருவதாக ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியான புகார்களை அடுக்கிவருகின்றனர். இந்தநிலையில், கச்சத்தீவையும் விட்டுவைக்காமல் அங்கேயும் 2 புத்தர் சிலைகளைஇலங்கை கடற்படை ரகசியமாக நிறுவியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயம்

கச்சத்தீவில் புத்தர் சிலைகள்:

கச்சத்தீவு அடையாளமே அங்கிருக்கும் புனித அந்தோணியார் ஆலயம்தான். சேதுபதி மன்னர் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சீனிக்குப்பன் கட்டிய இந்த புனித அந்தோணியர் ஆலயத்தில் ஆண்டாண்டுகளாய் நடைபெறும் கச்சத்தீவு திருவிழாதான் இன்றளவும் இந்தியா-இலங்கை ஆகிய இருநாட்டு தமிழ் மீனவர்களின் உறவுப்பாலமாக விளங்குகிறது. சமூக நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாய் விளங்கும் கச்சத்தீவு அந்தோணியர் ஆலயத்துக்கு அருகே இரண்டு புத்தர் சிலைகளை மறைமுகமாக நிறுவியிருக்கிறது இலங்கை கடற்படை.

கண்டுபிடித்த பங்குத்தந்தை:

மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த விவகாரம், இலங்கையின் நெடுந்தீவு பகுதியைச்சேர்ந்த பங்குதந்தை வசந்தன் என்பவர் கண்டுபிடித்து, புகைப்படங்களை பொதுவில் வெளியிடவும் பூதாகராமாய் வெடித்திருக்கிறது சர்ச்சை. இதுகுறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பங்குத்தந்தை வசந்தன், “கடந்த மார்ச் 3,4 ஆகிய தினங்களில் கச்சத்தீவில் நடைபெற்ற அந்தோணியர் ஆலய வருடாந்திர திருவிழா நடைபெற்றது. அப்போது, நெடுந்தீவிலிருந்து திருவிழாவிற்காக எடுத்து வந்த இரும்புத் தகடுகள் சிலவை காணாமல் போயின. அவற்றைத் தேடி கண்டுபிடிப்பதற்காக திருவிழா முடிந்த மறுநாள் கச்சத்தீவுக்கு சென்றேன்.

அரசமரத்தடியில் புத்தர் சிலை – கச்சத்தீவு

அப்போது, பக்தர்கள் யாரும் பார்க்கமுடியாதபடி நான்கு பக்கமும் பனை மட்டைகளால் தட்டிகள் அமைத்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு புத்தர் சிலைகளைப் பார்த்தேன். கச்சத்தீவில் அரச மரமே இல்லாத நிலையில் இலங்கையிலிருந்து அரச மரக் கன்றுகள் கொண்டுவந்து கச்சத்தீவில் நட்டுவளர்த்து, அதற்கடியில் 3 அடி உயரத்தில் புத்தர் சிலையும், மற்றொரு இடத்தில் 5 அடி உயர புத்தர் சிலையும் அமைக்கப்பட்டிருந்தது. அவற்றை எனது செல்போனில் படம்பிடித்துக்கொண்டேன்!” எனத் தெரிவித்தார்.

நான்கு பக்கமும் பனை மட்டைகளால் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் புத்தர் சிலை

நாடாளுமன்றத்தில் குரலெழுப்பிய இலங்கை தமிழ் எம்.பி:

உடனடியாக இந்த விவகாரம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இலங்கை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர். அதில், “கச்சத்தீவில் இவ்வளவு காலமாக அந்தோணியர் ஆலயம் மட்டுமே காணப்பட்டது. தற்போது அங்கு மிகப் பெரியதொரு புத்தர் சிலை எப்படி வந்தது என்பது தான் கேள்வியாக இருக்கிறது. இன்று இலங்கையில் உள்ளவர்களுக்கும் தமிழ் நாட்டில் இருக்கின்றவர்களுக்கும், கச்சத்தீவு அந்தோணியர் ஆலயத்திற்கு சொந்தமான இடம் என்று தெரியும். மீனவர்கள் அங்கு சென்று வருவது, வழிபடுவது வழக்கமான விஷயம்.

ஆனால், வடக்கு கிழக்கு பகுதிகளில் அதிகளவிலான பௌத்த அடையாளங்களை நிறுவி வருகிறது இலங்கை ராணுவம். அந்த வகையில் கச்சத்தீவில் மிகப் பெரிய புத்தர் சிலையை இலங்கை கடற்படை நிறுவியிருக்கிறது. கச்சதீவையும் விட்டு வைக்காத ஒரு நிலை இங்கிருப்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஆனால், இதைக் கேட்டால், கடற்படை வழிபடுவதற்காகத்தான் அங்கு சிலை வைக்கப்பட்டதாக அரசாங்கத் தரப்பிலிருந்து பதில் வரும். இந்த பௌத்த விகாரைகளை உடனடியாக அகற்ற வேண்டும்!” எனத் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன்

கண்டணம் தெரிவித்த தமிழ்நாட்டு தலைவர்கள்:

இந்த விவகாரம் கடல்தாண்டி தமிழ்நாட்டு தமிழர்களிடையேயும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ராமேஸ்வரம் வேர்கோடு பங்குத்தந்தை தேவசகாயம், “எதிர்காலத்தில்மற்ற மதத்தவர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் மத ஒற்றுமை பாதிக்கப்படும் வாய்ப்பிருக்கிறது” என அச்சம் தெரிவித்திருக்கிறார். அதேபோல தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களும் இலங்கை கடற்படையின் செயலுக்கு கடுமையான கண்டனத்தை பதிவி செய்திருக்கின்றனர்.

குறிப்பாக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்களக் கடற்படை அமைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த நடவடிக்கைக்கு தமிழகம் மற்றும் இலங்கையில் வாழும் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். சிங்கள அரசின் செயல் கண்டிக்கத்தக்கது! கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் மட்டுமே உள்ளது. அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் தமிழகம் மற்றும் ஈழத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து மதத் தமிழர்கள் பங்கேற்கின்றனர். அத்திருவிழா மத நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழ்கிறது. புத்தர் சிலை அமைக்கப்பட்டிருப்பது கச்சத்தீவை சிங்களமயமாக்கும் செயலாகும். புத்தர் கோயிலுக்கு ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்பட்டால் அது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும். மத நல்லிணக்கத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடும்!

இவற்றையும் கடந்து புத்தர் சிலை வழிபாடு என்ற பெயரில் சிங்களர்களையும், சீனர்களையும் கச்சத்தீவில் முகாமிடச் செய்து, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவை உளவு பார்ப்பதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்து விடும். கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டாலும் கூட அந்தோணியார் ஆலயத் திருவிழா, அடிப்படை வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றுக்கு இந்தியா தான் உதவி வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்டு கச்சத்தீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற ஆணையிட வேண்டும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

திருமாவளவன்

அதேபோல வி.சி.க தலைவர் டாக்டர் திருமாவளவன் எம்.பியும் தனது ட்விட்டர் பக்கத்தில், “கச்சத்தீவில் சிங்கள இனவெறியர்கள் புத்தர் சிலை ஒன்றை நிறுவி மத அடிப்படையிலான மோதலை உண்டு பண்ணுவதற்கான சதிவேலையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வளவு காலமாக அங்கே அந்தோணியார் ஆலயம் மட்டுமே உண்டு. ஆண்டுதோறும் கிறித்தவ திருவிழா நடைபெற்று வருகிறது. தற்போது திட்டமிட்டே சிங்கள இனவெறியர்கள் அங்கே பிரமாண்டமான புத்தர் சிலையை நிறுவி அங்கிருந்து கிறித்தவர்களை விரட்ட களம் அமைத்துள்ளனர். இது தமிழ்நாடு மற்றும் தமிழீழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையாகும். இப்போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்திய அரசு உடனடியாக அதனை அப்புறப்படுத்த வேண்டும்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

ஆதாரங்களுடன் வெளிப்பட்ட பின்னரும், கச்சத்தீவில் புத்தர்சிலைகள் எதுவும் நிறுவப்படவில்லை என்றுகூறி முழுப் பூசணிக்காயையும் சோற்றில் மறைக்கிறது இலங்கை கடற்படை.!

 

Author: ரா.அரவிந்தராஜ்

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.