“ஓ.பி.எஸ்-ஸுக்கு எப்படி நாங்கள் துணை நிற்கமுடியும்?” – சொல்கிறார் கரு.நாகராஜன்

17

அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி குறித்த அண்ணாமலையின் பேச்சு… அதற்கு கட்சி சீனியர்களின் எதிர்வினை. ராகுல் காந்தியின் கைது… எடப்பாடிக்கு ஆதரவாக வந்திருக்கும் தீர்ப்பின் பின்னணியில் பா.ஜ.க-வுக்கான இடம் இருக்கிறது என்கிற விமர்சனம் என பா.ஜ.க-வை மையமிட்டிருக்கும் தமிழக அரசியல் சூழல் குறித்து அந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜனை, பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் சந்த்தித்து சில கேள்விகளை முன்வைத்தேன்.

“அ.தி.மு.க-வுக்கான தீர்ப்பில், ‘சங்பரிவார்களும் துணையாக இருக்கிறார்கள் என்பது யூகிக்க முடிகிறது’ என்று திருமாவளவன் விமர்சித்திருக்கிறாரே?”

“திருமாவளவனுக்கு என்ன ஆனது… தி.மு.க அணியில் ஏற்பட்டிருக்கும் பிரச்னையால் ஏதோ ஒரு குழப்பத்தில் இருக்கிறார் என்பது மட்டும் தெளிவாகிறது. இதற்கு முன்பு எடப்பாடியை முதல் ஆளாக வாழ்த்தியவர், இப்போது ஏன் இப்படி பேசிக்கொண்டிருக்கிறார். வழக்கின் தன்மை, பேப்பர்கள் எல்லாம் வைத்து சட்டப்படி தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு நீதிபதியிடம் போய் இப்படி தீர்ப்பு சொல்லுங்கள் என்று சொல்லமுடியுமா… ஒரு கட்சியின் தலைவராக திருமாவளவனுக்கு இது தெரியாதா?”

“ `பா.ஜ.க சொல்லித்தான் பல விஷயங்களை விட்டுக்கொடுத்தேன்’ என ஓ.பி.எஸ் சொல்லிய நிலையில், இப்போதும் அவருக்கு பா.ஜ.க துணை நிற்கிறதா?”

அது அவர்களின் உட்கட்சிப் பிரச்னை. நீதிமன்றத்தில் சரி செய்கிறார்கள். அப்படியிருக்க ஓ.பி.எஸ்ஸுக்கு எப்படி நாங்கள் துணை நிற்க முடியும். ‘அ.தி.மு.க உட்கட்சி விஷயத்தில் எங்களுக்கு என்ன வேலை’ என்று எங்கள் மாநிலத் தலைவர் பல முறை சொல்லிவிட்டார்.”

“ராகுல் காந்தியைப் பார்த்து பிரதாமர் மோடிக்கு என்ன பயம்… பா.ஜ.க-வினர் பேசாத பேச்சையா ராகுல் காந்தி பேசிவிட்டார்?”

“எதற்கு பயப்பட வேண்டும்… ஒவ்வொரு எம்.எல்.ஏ., எம்.பி-யும் அரசியல் அமைப்புச் சட்டத்தை பின்பற்றிதான் அந்தப் பதவியில் இருக்கிறார்கள். அதற்குட்பட்டுதான் எல்லா அதிகாரமும் இருக்கிறது. யாரோ ஒருவர் போட்ட வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பு வந்திருக்கிறது. அதையடுத்து நாடாளுமன்றச் செயலகம் தகுதிநீக்கம் செய்திருக்கிறது. அப்படி நாங்கள் பேசியது தவறு என்றால் வழக்கு போடட்டும். அதை எதிர்கொள்கிறோம். ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதுபோல், இந்திரா காந்தி அம்மையாரின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவித்தபோது, எமர்ஜென்சி கொண்டுவந்தார்கள். ஜனநாயகம் கேள்விக்குறியானது. சர்வாதிகார நாடு எப்படி இருக்கும் என்பதை இந்திய மக்கள் பார்த்தார்கள்.”

“ஆனால், ‘பிரதமர் மோடி ஆட்சியில்தான் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடக்கிறது. ஜனநாயகக் குரல்கள் நசுக்கப்படுகின்றன’ என்கிறார்களே?”

“ராகுல் காந்தியின் பதவி செல்லாது என்று நாடாளுமன்றத்திலா தீர்மானம் கொண்டு வந்தார்கள்… ஜனநாயகத்தின் குரல் நசுக்கப்படுவதற்கு. தவறு செய்ததற்கு தண்டனை கிடைத்திருக்கிறது. அதை நீதிமன்றத்தில் நாடி சட்டப்படிதானே சந்திக்க வேண்டும். அப்படியே இவர்கள் போராட்டம் செய்தால் நீதிமன்றத்துக்கு எதிராகத்தானே போராட்டம் நடத்த வேண்டும். அதைவிட்டுவிட்டு பா.ஜ.க அலுவலகம் முன்பு பத்து பேர் வந்து போராட்டம் என்று செய்தியாக்குவது, கறுப்புச்சட்டை போட்டுக் கொண்டு சட்டமன்றம், நாடாளுமன்றம் செல்வது எல்லாம் வேலையற்றவர்கள் செய்வது. `இந்தத் தீர்ப்பின் பின்னணியில் மோடி இருக்கிறார். பா.ஜ.க இருக்கிறது’ என அதானிவரை கற்பனையில் போனால் என்ன செய்வது”

ராகுல் காந்தி – பா.ஜ.க

“அதானி பற்றி எதிர்க்கட்சியினர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வதில் பிரதமர் மோடிக்கு என்ன சிக்கல்?”

“என்ன பதில் சொல்ல வேண்டும்… அதானி எவ்வளவு கடன் வாங்கினார் என்று அவரின் வங்கிக் கணக்கை ஆர்.டி.ஐ போட்டு பாத்தால் தெரிந்துவிடப் போகிறது. அதானியின் வரவு செலவு கணக்குகளை என்ன நாடாளுமன்றத்திலா வைத்திருக்கிறோம். மக்களுக்காக பாடுபட இவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால் தினமும் போராட்டம், சண்டை, ஊர்வலம் என நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.”

“இதற்கான பதிலைச் சொல்லி ஒரு முற்றுப்புள்ளி வைக்காமல் நேரத்தை வீணடிப்பது பிரதமர் மோடிதானே?”

“நடைமுறையில், மக்களின் திட்டங்கள் பற்றி பேசுவதற்கோ, மசோதாக்கள் பற்றி விவாதிப்பதற்கோ நேரம் வீணடிக்கப்படும் என்கிற காரணத்தினால்தான் இதை பேசுவதில்லை. அதானி விவகாரம் ஒன்றும் ரகசியமில்லையே. ஓப்பன் டாக்குமென்ட்”

“ `அ.தி.மு.க-வுடன் கூட்டணி என்றால் ராஜினாமா… கூண்டைவிட்டு வெளியேறுவதற்கு கிளி தயராக இருக்கிறது…’ என்று அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறாரே?”

அண்ணாமலை

“மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய இரண்டு நாள்களுக்குப் பிறகு ஒரு பேட்டியில், ‘நான் உறுதியாக இருக்கிறேன். என் கட்சி மேலே வர வேண்டும். என் கட்சி நிர்வாகிகள் நாடாளுமன்றம், சட்டமன்றம் போக வேண்டும். அதற்கு என்ன முயற்சி எடுப்பேனோ அதை செய்வேன்’ என்று சொன்னதோடு, ‘கூட்டணியும் தொடரும்’ என்றார். அதோடு, ‘அரசியல் கட்சிகளின் நோக்கம், லட்சியம் என்பது வேறு. தேர்தல் கூட்டணி என்பது தற்காலிகமானது. அந்த தற்காலிகமான விஷயம் வேறு. என்னுடைய லட்சியம், நோக்கம் வேறு. அதற்கு வேண்டிய முடிவுகளை எடுப்பேன். தைரியமாகச் செயல்படுவேன்’ என திரும்பத் திரும்பச் சொல்கிறார். அதில் ஒரு குழப்பமும் இல்லை. அதே வேளையில் எந்தக் காலத்திலும் ராஜினாமா செய்வேன் என்று சொல்லவில்லை. ‘பா.ஜ.க-வுக்கு மக்களிடம் ஓர் இடம் இருக்கிறது. தமிழக மக்கள், இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அதை என் உள்ளுணர்வு சொல்கிறது’ என்று உறுதித் தன்மையோடு கட்சியை வழி நடத்துகிறார்.”

“அப்படி உறுதித் தன்மையுடன் இருக்கும்போது, கட்சியின் மூத்த தலைவர்களும் அண்ணாமலை தனித்து நிற்கச் சொல்வதை ஏற்கலாமே… ஏன் கள யதார்த்தம் புரிந்து கொண்டு தயங்குகிறார்களா?”

“கூட்டணிதான் முக்கியம் என்று யாரும் சொல்லவில்லையே. பா.ஜ.க என்பது தேசிய கட்சி. எனவே தேசியத் தலைவர்கள்தான் முடிவுசெய்வார்கள் என்பதை தொடர்ந்து சொல்கிறார்கள். மாநில தலைவர்தான் எல்லோரையும் வழி நடத்துகிறார். அவர் என்ன கள எதார்த்தம் தெரியாமலா பேசுகிறார். அண்ணாமலை, உறுதியாக இருக்கிறார். பின்வாங்கவில்லை. தனித்து நிற்பதா என்பது தேர்தல் வரும்போது தெரியும். தேர்தல் வரும்போது எவ்வளவோ மாற்றங்கள் வரலாம். தி.மு.க கூட்டணியிலேயே பல மாற்றங்கள் வரலாம். அண்ணாமலை தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது?”

“ஆருத்ரா மோசடி வழக்கில் பா.ஜ.க-விலிருக்கும் சிலர்மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?”

“குற்றவாளி என்று வழக்கு தொடுக்கப்பட்டர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். கட்சியில் தவற்றை அனுமதிப்பது கிடையாது. அண்ணாமலை அதில் தெளிவாக இருக்கிறார். மக்களை ஏமாற்றுவது மிகப்பெரிய மோசடி. அதில் யார் தவறு செய்திருந்தாலும் அண்ணாமலை தக்க முடிவெடுப்பார்.”

 

Author: அன்னம் அரசு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.