காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, மோடி என்ற பெயர்களை கொண்டவர்கள் திருடர்களாக உள்ளனர் என்று பேசியிருந்தார். இதன்மூலம் அவர் பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக பாஜ சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறியது. இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான ஜாமீனும் ராகுல்காந்திக்கு வழங்கப்பட்டது.இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, அவரை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நேற்று அறிவித்துள்ளது. இந்த தகுதி நீக்கம், தண்டனை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அமலுக்கு வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து ராகுல்காந்தி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். அவரது தகுதி நீக்கம் அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்செயலுக்கு, எதிர்க்கட்சி தலைவர்கள், ஒன்றிய பாஜ அரசுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.பாஜவின் சர்வாதிகார போக்கை மக்கள் நன்கு அறிந்து கொண்டுவிட்டார்கள் என்றும், நிச்சயம் வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜவுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்யவே சட்டத்தில் இடமில்லை என்றும், 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே தகுதி நீக்கம் செய்ய முடியும் எனவும் சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், தண்டனையை நீதிமன்றமே நிறுத்தி வைத்துள்ள நிலையில், இவ்வளவு அவசர அவசரமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது யாரோ கொடுத்த தவறான ஆலோசனையின் பேரில்தான் நடந்துள்ளது எனவும் குற்றம்சாட்டி உள்ளனர்.ஒன்றிய பாஜ அரசு வீட்டுக்கு செல்ல கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டதையே இந்த நிகழ்வு காட்டுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொண்ட நடைபயணம் மக்கள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரியில் தொடங்கி 3,970 கிமீ தூரம், 12 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் வழியாக மக்களை சந்தித்தவாறு சுமார் 145 நாட்களில் நடந்து முடித்தார். இது ராகுல்காந்தி மீதான மக்கள் செல்வாக்கை உயர்த்தி இருந்தது. இதை, உளவுத்துறை மூலம் உணர்ந்து கொண்ட ஒன்றிய பாஜ அரசு தகுதி நீக்கம் என்ற பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.இந்த தகுதி நீக்கம் தொடர்பான சலசலப்பு இன்றோ, நாளையோ முடிவுக்கு வந்துவிடும். இன்னும் 2 நாட்களில் முறைப்படி நீதிமன்றம் மூலம் தகுதி நீக்க அறிவிப்பை ராகுல்காந்தி முறியடிப்பார் எனவும் திமுக அறிவித்துள்ளது. ராகுல்காந்தி மீதான பழிவாங்கும் இந்த நடவடிக்கையால் அவர் மீதான இமேஜ் மக்கள் மத்தியில் மேலும் உயர்ந்திருக்கிறது. அத்துடன், பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டிய கட்டாயத்தை இதன் மூலம் ஒன்றிய அரசே ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதனை கூட்டணி கட்சி தலைவர்கள் உணர்ந்துகொண்டு செயல்பட்டு ஒன்றிய பாஜ அரசை வீழ்த்தும் காலம் நெருங்கி விட்டது.
Author : Dinakaran