சென்னை: ‘பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை விதித்தால், ஒன்றரை கோடி கட்சித் தொண்டர்களைக் கொண்ட கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துவதுடன், கட்சியின் செயல்பாடுகளை பாதிக்கும் என்பதால், தடை எதுவும் விதிக்க முடியாது’ என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது எனவும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சிடி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின்போது, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்புக்காக தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை விதித்தால், ஒன்றரை கோடி கட்சித் தொண்டர்களைக் கொண்ட கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Author: செய்திப்பிரிவு