கடந்த 2005ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதித்திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் ஒவ்வொரு ஊரகத்திலும் குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு தரப்படும். இந்த திட்டத்தால் நாடு முழுவதும் சுமார் 9 கோடிக்கு மேல் பணியாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் ஒன்றிய அரசு 75 சதவீதம், மாநில அரசு 25 சதவீதம் பகிர்ந்து கொள்கின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்தாண்டு ஒன்றிய அரசு ரூ.674 கோடியும், மாநில அரசு ரூ.225 கோடியும் பகிர்ந்துள்ளன. தற்போது ஒரு நபருக்கு நாளுக்கு ரூ.281 ஊதியமாக வழங்கப்படுகிறது. விவசாயம் இல்லாத காலங்களிலும், வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் நிலையிலும் பலரது குடும்பத்தில் இது ஒளியேற்றும் திட்டமாக இருந்து வருகிறது. காங்கிரஸ் அரசு கொண்டு வந்த திட்டம் என்பதாலோ என்னவோ, இந்த திட்டத்தின் மீது பின்னர் வந்த பாஜ அரசு போதிய அக்கறை காட்டவில்லை. கடந்தாண்டு முதல் ஒன்றிய அரசு 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றுபவர்கள், மொபைல் செயலி மூலம் தங்களின் வருகையை பதிவு செய்ய வேண்டுமென அறிவித்திருக்கிறது. விளிம்பு நிலையில் உள்ள மக்கள் சாதாரண மொபைல் போனையே பயன்படுத்துகின்றனர். மொபைல் செயலியில் பதிவு செய்ய வேண்டுமென்றால் ஆன்ட்ராய்ட் போன் அவசியம். அதை வாங்கும் அளவிற்கான வசதியான சூழல் இல்லாதவர்களுக்கு இது சிக்கலையே ஏற்படுத்தும். மேலும், பெரும்பாலான கிராமப்புறங்களில் இன்டர்நெட் சிக்னல் ஒழுங்காக கிடைக்காது. இதனால் வேலைக்கான வருகையை பதிவதில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டால் ஊதிய இழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. இது வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்கள் மீது ஒன்றிய அரசு நடத்தும் தாக்குதல் என எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனங்களை வலுவாகவே பதிவு செய்துள்ளன.100 நாள் வேலை திட்டத்தின் மீது பாஜ அரசு, போதிய ஆர்வம் காட்டவில்லை; படிப்படியாக இந்த திட்டத்தை நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்கிறதோ என எண்ணும்படி, நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், கடந்தாண்டை விட சுமார் 21 சதவீதம் நிதி குறைக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ரூ.73,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு அதிகரிப்பின்படி நடப்பாண்டில் ரூ.89,000 கோடி நிதி ஒதுக்கியிருக்க வேண்டும்.தற்போது பட்ஜெட்டில் ஒதுக்கியிருக்கும் நிதி மூலம் குறைந்தபட்சம் 25 – 30 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்க முடியும். ஊரகங்களில் ஆண்டிற்கு சுமார் 30 சதவீதம் வேலை வாய்ப்பு என்றிருந்த சூழலில், தற்போது 10 சதவீதத்துக்கும் குறைவான நாட்களே பணி என்ற சூழல் ஏற்படும். மெல்ல மெல்ல இந்த திட்டமே நீர்த்துப் போய் விடும். இதற்கான ஒரு முயற்சியாகத்தான் பாஜ அரசு இத்திட்டத்தில் நிதி குறைப்பு மற்றும் பல்வேறு புதிய விதிமுறைகளை புகுத்தி வருவதாக கிராமப்புற மக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கிராமப்புற மக்களின் வாழ்வாதார தேவையை பூர்த்தி செய்யும் இந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்தை படிப்படியாக நிறுத்தும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபடக்கூடாது என்பதே அனைவரின் விருப்பமாகும்.
Author : Dinakaran