`ஏலத்துக்கு வரும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்' – காரணம் இதுதான்!

7

மதுரை ஞானஒளிவுபுரத்தைச் சேர்ந்தவர் சவரிமுத்து. நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரரான இவர், மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை பணியின்போது திருமங்கலத்திலிருந்து சாத்தூர் வரை சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டார். அப்போது, தேசிய நெடுஞ்சாலை துறையினர் இவரது ஒப்பந்தத்தை மாற்றிவிட்டு, வேறொரு ஒப்பந்ததாரருக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியை ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சவரிமுத்து செய்த பணிகளுக்காக அவருக்கு 3,30,40,000 வரை நெடுஞ்சாலைத்துறையினர் நிலுவைத் தொகை வழங்க வேண்டியிருந்தது. இந்தப் பணம் கிடைக்காத நிலையில் ஒப்பந்ததாரர் சவரிமுத்து இறந்துவிட்டார். இதையடுத்து, அவரின் வாரிசுகளான சூசையம்மாள், ஆல்பர்ட் சேகர், குளோரி, செங்கோல், லியோ ஃபிரான்சிஸ் சேவியர், அலங்கார பினோமி, ஜோஸ்வின் நவமணி ஆகியோர் நெடுஞ்சாலைத்துறையினர் தரவேண்டிய நிலுவைப் பணத்தைக் கேட்டு விருதுநகர் மாவட்ட கூடுதல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர், தேசிய நெடுஞ்சாலை நெல்லை கோட்ட இன்ஜினீயர் உட்டோட நான்கு பேர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில், 28.6.2007 அன்று, 87,00,1200 ரூபாயை வழக்கு தாக்கலான நாள் முதல், தொகை செலுத்தும் நாள் வரை 6 சதவிகித வட்டியுடன் வழக்குச்செலவு தொகையையும் சேர்த்து செலுத்துமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசு தரப்பில் மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம் 68,43,000 ரூபாயை டெபாசிட் செய்யும்படி உத்தரவிட்டது. அந்தப் பணத்தில் 40,00,000 சூசையம்மாள் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது‌. தொடர்ந்து மீதத்தொகை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு 9 சதவிகித வட்டியுடன் செலுத்த வேண்டும் என 26.5.2021 மதுரை உயர் நீதிமன்றக் கிளை தனது உத்தரவில் தெரிவித்திருந்தது. மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவின்படி, சவரிமுத்து குடும்பத்துக்கு வட்டியுடன் சேர்த்து மொத்தம் 2,35,28,000 ரூபாய் நெடுஞ்சாலைத்துறை செலுத்த வேண்டியிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் இந்தத் தொகையை அரசு தரப்பில் செலுத்தப்படாத நிலையில், சவரிமுத்து குடும்பத்தின் சார்பில் இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹேமானந்தகுமார், நிலுவைத்தொகை வழங்குவது குறித்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அதன்பின்பும் அரசு தரப்பில் பணம் செலுத்தப்படாத நிலையில், கலெக்டர் அலுவலக கட்டடத்தை ஏலம்விட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையை வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு செலுத்த வேண்டும் என நீதிபதி ஹேமானந்தகுமார் உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, ஏல அறிவிப்பு பணியை மேற்கொள்வதற்காக நீதிமன்ற ஊழியர் ஜெயக்குமார் கலெக்டர் அலுவலக கட்டடத்தில் சொத்து ஏல நோட்டீஸை ஓட்டினார்.

தீர்ப்பு!

அதில் கலெக்டர் அலுவலக கட்டடத்தின் மதிப்பு 3.8 கோடி ருபாய் எனவும், இந்த மாதம் 31-ம் தேதி ஏலம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே வாகன விபத்து வழக்கில் இழப்பீடு தொகை வழங்காததால் கலெக்டரின் காரை ஜப்தி செய்ய நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டு, அதன் பின்னர் நீதிமன்றத்தில் முறையிட்டதன்பேரில் கால அவகாசம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Author: க.பாலசுப்பிரமணியன்

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.