`எப்படி என் பையனை அடிப்பீங்க?’ – பள்ளியில் புகுந்து ஆசிரியரை சரமாரியாக தாக்கிய பெற்றோர் – மூவர் கைது

11

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள கீழநம்பிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மகள் செல்வி. செல்விக்கு திருமணம் ஆகி அவரின் கணவர் சிவலிங்கத்துடன் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் வசித்து வருகிறார் . சிவலிங்கம் மற்றும் செல்வி தம்பதிக்கு 7 வயதில் பிரகதீஸ் என்ற மகன் உள்ளான். பிரகதீஸ், தனது தாத்தாவான முனியசாமி உடன் கீழநம்பிபுரத்தில் வசித்து வருகிறார். அங்குள்ள அரசு உதவி பெறும் இந்து தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான்.

அந்தப் பள்ளியில் வீரப்பட்டியை சேர்ந்த குருவம்மாள் தலைமை ஆசிரியையாகவும், தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த பாரத் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு வகுப்பில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது பிரகதீஸ் கீழே விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. மெதுவாக விளையாடும்படி ஆசிரியர் பாரத் சத்தம் போட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், மாணவர் பிரகதீஸ் வீட்டுக்குச் சென்று தனது தாத்தா முனியசாமியிடம் ஆசிரியர் பாரத் தன்னை அடித்ததாக கூறியுள்ளார். இதையடுத்து முனியசாமி அவசர போலீஸ் எண் 100 அழைத்து புகார் செய்துள்ளார்.

இதையடுத்து எட்டயபுரம் காவல் நிலைய போலீஸார், பள்ளியில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், விசாரணையில் அப்படி ஒரு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என பள்ளி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று மாலை பள்ளிக்குச் சென்ற சிவலிங்கம் அவரின் மனைவி செல்வி, செல்வியின் தந்தை முனியசாமி ஆகியோர், “எப்படி ஏன் பையனை அடிக்கலாம்?” என, ஆசிரியர் பாரத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றவே ஆசிரியர் பாரத்துக்கு, கொலை மிரட்டல் விடுத்தும் பேசியுள்ளனர். ஆத்திரத்தில் பெஞ்சுகள், நாற்காலி, மேசையை அடித்து நொறுக்கியும், பாடநூல்களை தூக்கியும் வீசியுள்ளனர்.

மேலும் மூவரும் தங்களின் காலணியை எடுத்து ஆசிரியர் பாரத்தை ஓட ஓட விரட்டித் தாக்கியுள்ளனர்.‌ இதை தடுக்க வந்த பள்ளி தலைமை ஆசிரியர் குருவம்மாளின் சேலையைப் பிடித்து இழுத்தும் தாக்கி உள்ளனர். இதில் குருவம்மாள் காப்பாற்றுங்கள் எனக் கூச்சலிட்டுள்ளார். குருவம்மாளின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் பளளிக்குள் நுழைந்து மூவரையும் கண்டித்து விரட்டியுள்ளனர்.

இதற்கிடையில் ஆசிரியர் தாக்கல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட சிவலிங்கம், அவரது மனைவி செல்வி , மற்றும் செல்வின் தந்தை முனியசாமி ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Author: இ.கார்த்திகேயன்

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.