2014 ல் ரூ.25 ஆயிரம் கோடியாக இருந்த வேளாண் நிதிஒதுக்கீடு, 2023ல் ரூ.1.25 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது என்று பெங்களூரு விழாவில் பெருமைப்பட்டுக் கொண்டார் பிரதமர் மோடி. ஆனால் நிலைமை அப்படியா இருக்கிறது?. ஒதுக்கும் நிதி எங்கே செல்கிறது, எதற்கு செல்கிறது என்று கேட்க வேண்டிய சூழல் அல்லவா உருவாகி இருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் ஜனவரி மாத இறுதியில் பருவம் தவறி பெய்த மழையால் பதறிப்போனார்கள் விவசாயிகள். அது அறுவடை காலம். ஒரு வாரம் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் நெற்பயிர் கொள்முதலில் ஈரப்பதம் சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினார். ஆனால் சமீபத்தில் தான் 20 சதவீத ஈரப்பத நெல்லையும் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது. என்ன பிரயோஜனம்?. அதேபோல்தான் மகாராஷ்டிர மாநிலத்தில் வெங்காய விலை வீழ்ச்சி கதை. 512 கிலோ வெங்காயத்தை 70 கிமீ எடுத்துச்சென்று விற்றதில் அந்த விவசாயிக்கு கிடைத்தது வெறும் 2 ரூபாய். அதாவது ஒரு கிலோ வெங்காயம் அங்குள்ள வேளாண் விளைபொருள் விற்பனை மையத்தில் 1 ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி கூலி ரூ.509.50. மீதம் ரூ.2.49 மட்டும் விவசாயிக்கு கிடைத்து இருக்கிறது. அதுவும் ரூ.2க்கு செக் போட்டு வழங்கப்பட்டு உள்ளது. 15 நாள் கழித்து வங்கி கணக்கில் ஏறுமாம். இந்த 500 கிலோ வெங்காயத்தை விளைச்சலில் கொண்டு வர ஆன செலவு ரூ.40 ஆயிரம். ஆனால் கிடைத்த வருமானம் ரூ.2. இப்படித்தான் நாடு முழுவதும் விவசாயிகள் நிலைமை இருக்கிறது. எத்தனையோ நவீன தொழில்நுட்பம் வளர்ந்த பின்னும் விவசாயத்தையே இன்று வரை மிகப்பெரிய தொழிலாக கொண்டுள்ள இந்தியாவில் அதற்கான விளைபொருட்களுக்கு உரிய விலை இல்லை என்றால், விவசாய விளைபொருட்களை சேமித்து வைக்க வேண்டிய குடோன்கள், கட்டமைப்புகள் இல்லை என்றால் என்ன பெருமை பாராட்டி என்ன பயன்?. பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் 13வது தவணையாக விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கேட்பது இந்த நிதியை அல்ல. விவசாய பொருட்களை வைத்துக்கொள்ள தேவைப்படும் கட்டமைப்புகளைத்தான் என்பது ஒன்றிய அரசின் காதுகளுக்கு எப்போது சென்று சேரும்?. இப்போது விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கும் இதே ஒன்றிய அரசு தான், பருவத்தால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு உரிய இழப்பீட்டை உரிய நேரத்தில் வழங்க மறுத்து வருகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உள்ள இடம் பா.ஜ ஆளும் மாநிலங்கள் என்றால் உரிய இழப்பீடு உடனடியாக வழங்கப்படுவதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.இப்போது தேவை, நாடு முழுவதும் தாலுகா வாரியாக விவசாய விளைபொருட்களை உயர் தொழில்நுட்ப முறையில் சேமித்து வைத்துக்கொள்ள தேவையான கிட்டங்கிகளை அமைப்பது அவசியம். அடுத்தது விவசாய பயிர்கள் காலநிலை மாற்றங்கள், இயற்கை சீற்றங்களில் சேதம் அடைந்தால் அந்தந்த தாலுகா அளவில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு உடனடியாக நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை செய்யும் போது நிச்சயம் விவசாயிகள் வளர்ச்சி அடைவார்கள். அப்போது நாடு இன்னும் அதிவேகமாக முன்னேறும்.
Author : Dinakaran