அல்வா தெரியும்… புட்டு தெரியும்…! அதென்ன ‘அல்வா புட்டு’ என்று யோசிக்கிறீர்களா? இருக்கிறது சுவாரஸ்யம்… அல்வாவுக்கு திருநெல்வேலி… புட்டுக்கு கேரளா! இரண்டும் சேர்ந்த புதுமையான அல்வா புட்டு எந்த ஊருக்குச் சொந்தம் தெரியுமா? மாம்பழத்துக்குப் பெயர் போன சேலத்துக்குத் தான்!
வழுவழுப்பான தோற்றத்துடன் குறைந்த விலையில் பலரது பசியாற்றும் ஆரோக்கியத் தின்பண்டம்தான் அல்வா புட்டு! சேலத்தில் இருக்கும் எந்தப் பலகாரக் கடைக்குச் சென்றாலும், அல்வா புட்டைத் தரிசிக்கலாம். குறிப்பாக வீட்டிலேயே செய்யப்படும் பலகாரங்களில் அல்வா புட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. பண்டிகைக் காலச் சிற்றுண்டிகளில் அல்வா புட்டு தவறாமல் இடம் பிடித்துவிடுகிறது.
எவ்விதச் செயற்கை ரசாயனக் கலப்படமோ, எண்ணெய் சேர்மானமோ இல்லாத இன்சுவை சிற்றுண்டி சேலத்து அல்வா புட்டு! இதைச் சிறுவர், சிறுமிகளுக்கு வீட்டிலேயே செய்துகொடுக்க, ஆரோக்கியம் கியாரண்டி. இளம் தலைமுறையோடு பசையாக ஒட்டிக் கிடக்கும் துரித உணவுகளை வேரறுக்க அல்வா புட்டு நிச்சயம் உதவும்.
Authour: டாக்டர் வி.விக்ரம்குமார்