அ.தி.மு.க-வைத் தொடங்கிய பிறகு, எம்.ஜி.ஆர் முதன்முதலில் வென்ற தொகுதி அருப்புக்கோட்டை. அந்த ஊரின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், அ.ம.மு.க அமைப்புச் செயலாளருமான கே.கே.சிவசாமி சமீபத்தில் எடப்பாடியைச் சந்தித்து அ.தி.மு.க-வில் இணைந்தார். அவரைக் கட்சியில் சேர்த்ததில், விருதுநகர் மாவட்டச் செயலாளர் ராஜேந்திர பாலாஜிக்கு உடன்பாடு இல்லை. “ராஜபாளையத்தில் நான் தோற்றதுக்கு முதல் காரணம் அந்த ஆள்தான். விருதுநகரில் எந்தக் கூட்டம் நடத்தினாலும் தி.மு.க-வை விட்டுவிட்டு என்னைத்தான் திட்டித் தீர்ப்பார். அவரைக் கட்சியில் சேர்ப்பது என்னை அவமானப்படுத்துவதுபோல இருக்கிறது” என எடப்பாடிக்கு நெருக்கமானவர்களிடம் கொதித்திருக்கிறார் பாலாஜி.

“தமிழ்நாட்டு அரசியல்ல என்ன நடந்துகிட்டு இருக்கு… இவர் என்ன பேசிக்கிட்டு இருக்காரு… ஒரு முன்னாள் எம்.எல்.ஏ நம்ம கட்சியில் இணைய ஆசைப்படுறார்னா அவரைக் கூட்டிக்கிட்டு வரவேண்டியதுதானே மாவட்டச் செயலாளர் வேலை… அதைச் செய்யாம வந்தவரையும் விரட்டச் சொல்றாரா பாலாஜி?” என்று எகிறிவிட்டதாம் எடப்பாடி தரப்பு. இதைச் சற்றும் எதிர்பார்க்காத ராஜேந்திர பாலாஜி மறுபடியும் `கப்சிப்’ மோடுக்குச் சென்றுவிட்டாராம்.
ஜல்லிக்கட்டுக்குப் பேர்போன அந்தத் தென்மாவட்டத்தில், இரண்டு அமைச்சர்கள் ஒருவருக்கெதிராக ஒருவர் சீறிக்கொண்டிருந்தார்கள். தலைமை உத்தரவால் ஒரு சமரசக் கூட்டம்கூட நடந்தது. ஆனால், இப்போது அவர்கள் மறுபடியும் முட்டிக்கொள்கிறார்களாம். முதன்மையானவரின் பிறந்தநாளுக்காக ஆன்மிக அமைச்சர் தலைநகரில் நடத்தியதுபோலவே, ஒரு புகைப்படக் கண்காட்சியை தூங்கா நகரிலும் நடத்தினார் ‘சொத்து’ அமைச்சர். தனியார் மண்டபத்தில் நடக்கும் அந்தக் கண்காட்சிக்கு மாவட்டம் முழுக்கவிருந்து பொதுமக்களை ‘அழைத்து’ வந்தும் கெத்து காட்டினார். ஆனால், உள்ளூரிலேயே இருக்கும் ‘கஜானா’ அமைச்சரை அவர் கண்டுகொள்ளவில்லையாம்.
தொகுதிக்குள் சிறு சிறு நிகழ்ச்சியில்கூட கலந்துகொண்ட ‘கஜானா’ அமைச்சர், மா.செ-வான ‘சொத்து’ அமைச்சர் நடத்திய கண்காட்சியை எட்டிக்கூடப் பார்க்கவில்லையாம். கூடவே, ‘அவர் தலைமையை காக்கா பிடிக்கிறதுக்காக நடத்துற நிகழ்ச்சி… நாம எதுக்குப் போகணும்?’ என்று கமென்ட் அடித்ததாகவும் சொல்கிறார்கள் உடன்பிறப்புகள்!
ஆந்திர எல்லையை ஒட்டியிருக்கும் மாவட்டத்தில், கட்டடங்களுக்கு கான்கிரீட் கலவை சப்ளை செய்யும் ரெடிமிக்ஸ் கான்கிரீட் ஆலை ஒன்றை நடத்திவருகிறார், பெருமாள் பெயரைக்கொண்ட மக்கள் பிரதிநிதி. சமீபகாலமாக அவரது கான்கிரீட் லாரிகள் ‘பீரங்கி நகர’ எல்லைக்குள் தலைகாட்டத் தொடங்கியிருக்கின்றனவாம். இதில் கடுப்பான ‘கல்’ அமைச்சர், மக்கள் பிரதிநிதியை அழைத்து, “உன் எல்லையைத் தாண்டி, என் எல்லைக்குள்ள எதுக்குய்யா உன் லாரிகளெல்லாம் வருது… இது உனக்கும் நல்தில்லை, உன் பிசினஸுக்கும் நல்லதில்லை” என மிரட்ட, “நீங்க தொழிலைச் சரியாச் செஞ்சா… ஏன் என்னோட லாரிகளை உங்க ஏரியாவுக்குக் கூப்பிடப்போறாங்க” என கெத்தாக பதில் சொல்லிவிட்டாராம் மக்கள் பிரதிநிதி. கடுப்பான ‘கல்’ அமைச்சர், “உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று சவால்விட்டிருக்கிறாராம். இதனால் எந்த நேரத்தில், என்ன நடக்குமோ என்ற பீதியில் இருக்கிறார்களாம் இவர்களை நம்பி தொழிலில் முதலீடு செய்த பிசினஸ் புள்ளிகள்.
தங்கள் பிள்ளைகளை எப்படியாவது அரசியலில் பெரிய ஆளாக்கிவிட வேண்டும் என்பது பெரும்பாலான கரைவேட்டிகளின் கனவு. அதற்காக, தாங்கள் பங்கேற்கும் அரசியல் நிகழ்வுகளில் பையனையும் களமிறக்குவது வழக்கம். ஜில் மாவட்ட ஆளுங்கட்சிச் செயலாளரோ கொஞ்சம் வித்தியாசமானவர். பையனிடம், ‘அரசியலெல்லாம் வேண்டாம் தம்பி… கமிஷன் வசூலிப்பது எப்படின்னு கத்துக்கோ…’ என்று சொல்லி, தானே ட்ரெயினிங்கும் கொடுக்கிறாராம். பையனும் வேகமாகத் தொழில் கற்றுக்கொண்டு, ‘கட்சி வளர்ச்சி நிதி’ என்ற பெயரில் கான்ட்ராக்டர்களிடம் மட்டுமன்றி, மாவட்டம் முழுவதும் வசூலை வாரிக்குவித்துவருகிறாராம். ‘பையன் பதினாறு அடி பாயுறான் அண்ணே’ என மா.செ-யிடம் கான்ட்ராக்டர்கள் புலம்ப, ‘சான்றோன் எனக் கேட்ட தாய்’ மனநிலையில் ரசிக்கிறாராம் மா.செ.
நெல்லை, தென்காசி மாவட்டங்களிலிருந்து ஜல்லி, எம்-சாண்ட், பாறைகள் உள்ளிட்ட கனிம வளங்கள் கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க, பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். குறிப்பாக, தென்காசி மாவட்டம், புளியரை வழியாக தினம்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட அளவைவிடவும் பல மடங்கு ஏற்றிச் செல்லப்படும் அந்த வாகனங்களுக்கு ‘ஓவர் லோடு’ அபராதம்கூட விதிக்காமல் செக்போஸ்டைக் கடந்து செல்ல தமிழக காவல்துறையினர் அனுமதிப்பதாக மக்களிடையே எதிர்ப்புக்குரல் வலுத்துவருகிறது. ஆனால், அந்தப் பகுதியின் இலைக் கட்சி மா.செ-வும், சட்டமன்ற உறுப்பினருமான திருமாலின் பெயரைக்கொண்டவர், இதைக் கண்டுகொள்வதே இல்லையாம். கனிம வளக் கொள்ளையர்களிடமிருந்து கணிசமான தொகை மாதம்தோறும் காணிக்கையாகச் செல்வதே இந்த ஆழ்ந்த மௌனத்துக்குக் காரணம் என்கிறார்கள் உள்ளூர் ரத்தத்தின் ரத்தங்கள்.
Author: கழுகார்