புதுக்கோட்டையில் தே.மு.தி.க நிர்வாகியின் திருமணவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “பால் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் அனைவரும் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசியப் பொருள்.
இன்று மதுரை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் கொள்முதல் விலை போதவில்லை என்று விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால், ஒரு பக்கம் ஆவினில் தட்டுப்பாடு நிலவுகிறது. விநியோகம் சரியாகச் செய்யப்படப்படவில்லை. இந்த விஷயத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், இதில், கவனம் செலுத்தி பிரச்னையைச் சரிசெய்ய வேண்டும்.

அரியலூரில் மருத்துவக் கல்லூரி கலையரங்கத்துக்கு அனிதா பெயர் வைத்துவிட்டதால், நீட்டுக்கான பிரச்னை முடிந்துவிட்டதாக தி.மு.க நினைக்கிறது. இது, கண்துடைப்பு நாடகம். இந்தியா முழுவதும், நீட் தேர்வு நடக்கிறது. நீதிமன்றம் `தடை செய்ய முடியாது’ என்று கூறிவிட்டது. ஆனால், தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது, நீட் தேர்வை வைத்து அரசியல் செய்து ஆட்சிக்கு வந்தார்கள்.
அப்போது, `எங்க ஆட்சி வந்தவுடன் முதல் கையெழுத்தே நீட் ரத்துக்காகத்தான் இருக்கும்’ என்று கூறினார்கள். ஆனால், இரண்டு வருடத்தில் எதுவும் செய்யவில்லை. அவர்களால் முடியாது. அதை வைத்து அரசியல் செய்யாமல், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் என யாரையும் குழப்பாமல் இது பற்றி தெளிவான அறிவிப்பைக் கொடுக்க வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலில் எத்தனையோ கட்சிகள் போட்டியிடத் தயங்கியபோது, துணிச்சலோடு தேர்தலை எதிர்கொண்டோம்.
இது ஜனநாயகத்துக்கு முற்றிலும் எதிரான ஓர் இடைத்தேர்தல். பல கோடிகளைச் செலவுசெய்து இன்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள். ஆதாரங்களைத் திரட்டிக் கொடுத்துப் பார்த்தோம். ஆனால், தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. தி.மு.க கட்சிக்காரர்களே ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்கின்றனர். திருவாரூருக்கு உதயநிதி ஸ்டாலின் வருகிறார். அவர்கள் கட்சிக்காரர்களே சாலையில் மறியல் போராட்டம் செய்கிறார்கள். அமைச்சர்கள் அத்தனை பேருமே, மக்கள் முகம் சுளிக்கக்கூடிய வகையிலேயே நடந்துகொள்கின்றனர்.
தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. `திராவிட மாடல்’, `திராவிட மாடல்’ என்று சொல்கிறார்களே, இதுதான் `திராவிட மாடல்’. பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 டெபாசிட் செய்யப்படும் என்று இந்த வருட பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள். இந்தத் திட்டத்தை கேப்டன் விஜயகாந்த், 2009-லேயே அறிமுகப்படுத்திவிட்டார். அவர் பிறந்தநாளன்று பிறந்த நூற்றுக்கணக்கான பெண் குழந்தைகளைத் தேர்வுசெய்து அன்றைக்கே தன் சொந்த செலவில் ரூ.10,000 அந்தக் குழந்தைகள் பெயரில் வைப்புத் தொகையாகக் கொடுத்தார்.

வீடு தேடி ரேஷன் பொருள் திட்டம் குறித்து பேசியவர் கேப்டன். அதைப் பல மாநிலங்களில் செயல்படுத்தியிருக்கின்றனர். ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வை எழுதாமல் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியிருக்கின்றனர். உடனடியாக தமிழக அரசு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ஆய்வுசெய்து இதற்கான தீர்வு காண வேண்டும். தேர்தலைப் பொறுத்தவரை மக்களுக்கு நம்பிக்கை குறைந்துகொண்டுவருகிறது.
தேர்வுகளைப் பொறுத்தவரை, மாணவர்களுக்கு நம்பிக்கை குறைந்துகொண்டே வருகிறது. அ.தி.மு.க தற்போது பல பிரிவுகளாகப் பிரிந்திருக்கின்றன. அ.தி.மு.க பிரச்னையைப் பொறுத்தவரை அவர்கள்தான் அதைச் சரிசெய்ய வேண்டும். இன்றுவரை தமிழகத்தில் நடக்கும் பிரச்னைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறோம். தொடர்ந்து, குரல் கொடுப்போம்” என்றார்.
Author: மணிமாறன்.இரா