வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
சுமார் எண்பத்தி ரெண்டு வருடங்களுக்கு முன் என் பெற்றோருக்கு திருமணம் முடிந்தது. என் மூத்த அக்காவிற்கு தற்போது வயது எண்பது. அந்த காலகட்டத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் அவர்களின் நம்பிக்கை பழக்க வழக்கங்கள் இதை எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன்.
என் தந்தைக்கு செல்ல மகள் நான். அதிகமாக என்னுடன் தான் அவர் அதிக நேரம் செலவிட்டிருப்பார். எங்கள் ஊரில் எங்கள் சொந்தத்தில் நடந்த அநேக கதைகளை திகைப்பு நகைச்சுவை என கலந்து கட்டி சுவாரசியமாக சொல்லுவார். அதில் அவர் என் தாயை மணந்த கதையும் உண்டு ..
அறந்தாங்கி அருகே ஒரு சிறு குக்கிராமம் என் தாய் பிறந்த ஊர். என் அத்தையை மணந்த மாமாவிற்குத் தான் பெண் பார்க்க அவர்கள் வீட்டினர் போயிருக்கிறார்கள்.

இவர்கள் வண்டி கட்டிக் கொண்டு போகையில் ஊர் எல்லையில் ஏதோ சவ ஊர்வலம் சென்றிருக்கிறது. சகுனம் சரியில்லை என்று ஊருக்குள் நுழையாமல் அங்கேயிருந்த பிள்ளையார் கோவிலில் மாட்டை அவிழ்த்து விட்டு அருகில் இருந்த வீட்டு திண்ணையில் இரவு தங்கியிருந்திருக்கிறார்கள்.
அந்த வீட்டினர் இவர்கள் வந்த காரணத்தை கேட்கவே எங்கள் கிராமம் மற்றும் என் தாத்தாவின் பெயரை சொல்லி இன்னார் வீட்டு பெண்ணை பெண் பார்க்க வந்தோம். ஆனால் சகுனம் சரியில்லை. அதனால் இன்று இரவு இங்கே தங்கி விட்டு நாளைக் காலை எங்கள் ஊருக்கு போகிறோம் என்று சொல்லியிருந்திருக்கிறார்கள்.

அந்த வீட்டினார்கள் என் தந்தையின் தாய்வழி உறவினர்கள். எனவே புதுக்கோட்டையில் என் அப்பாவின் அப்பா பெயரை சொல்லி அவர்கள் வீட்டில் ஒரு சிறு பெண் இருக்கிறாள். போய் பாருங்கள் என்று சொல்லவே மறுநாள் காலையில் வண்டியை புதுக்கோட்டைக்கு விட்டிருக்கிறார்கள்.
என் அத்தைக்கு அப்போது வயது ஏழு. வீட்டு வாசலில் தெருவில் பாண்டி விளையாடிக் கொண்டிருந்த பெண்ணை இழுத்து மனையில் அமர்த்தி திருமணம் முடித்து வைத்தனர் அப்போதைய பெரியவர்கள். என் மாமா பள்ளிக்கூட வாத்தியார். படிப்பின் அருமை தெரிந்தவர்.
திருமணத்திற்குப் பிறகு வீட்டில் எதிர்த்து பெரியவர்களை அத்தையை மெட்ரிகுலேஷன் படிக்க வைத்து பள்ளி ஆசிரியையாக வேலை பார்க்க வைத்தார்.
அவருக்கு என் தந்தையை மிகவும் பிடிக்கும். மகா அழகான என் தந்தைக்கு என் அம்மாவைப் பற்றி விவரம் சொல்லி உடன் வந்து பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார் அவர். இந்த கதையை என் மாமாவும் என்னிடம் சொன்னதுண்டு. என் தந்தை மகா அழகு என்பதில் எனக்கு பெருமை உண்டு. என் சின்ன அக்கா எப்போதும் என் அப்பாவிடம் சொல்வாள். நல்லவேளை அப்பா. நம்ம அம்மா மட்டும் அந்த மாமாவை கல்யாணம் பண்ணியிருந்தால் நாங்களும் அவரைப் போல கிளி மூக்குடன் பிறந்திருப்போம் என்று.

எங்க அப்பா ரசித்து சிரித்தாலும் எங்க அம்மாவுக்கு இதைப் போன்ற பேச்சுக்கள் கோபத்தைத் தரும். அக்காவை திட்டுவார்கள். போதும் போதும் இதைப் போல கிக்கிரி பிக்கிரி ன்னு பேசக் கூடாது என்று திட்டுவாள்.
குழந்தை பேரற்ற என் அத்தையும் மாமாவும் எங்களிடம் சொந்த பிள்ளைகளைப் போன்ற அன்பு செலுத்தியவர்கள். நாங்களும் அவர்களை எங்கள் சொந்த பெற்றோரைப் போல கடைசி வரை அன்புடன் பராமரித்தோம்.
எங்கள் அத்தையை பார்க்கப் போய் தானே என் அப்பா அம்மாவை திருமணம் செய்தார். அதனால் அத்தையால் தானே எங்கள் அம்மா கிடைத்தாள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
Author: ஜி. ஷியாமளா கோபு