`அதிமுக – பாஜக கூட்டணி முறிகிறதா?' – பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன?

11

அ.தி.மு.க – பா.ஜ.க இடையே சமீபகாலமாக வார்த்தைப்போர் நிலவிவருகிறது. அத்தோடு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் பா.ஜ.க-விலிருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்தது பா.ஜ.க-வினரை மேலும் கோபப்படுத்தியது. கூட்டணி தர்மத்தை மீறி அ.தி.மு.க செயல்பட்டு வருவதாகக் கூறி பா.ஜ.க-வினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். `ஒவ்வொரு வினைக்கும் கண்டிப்பாக ஓர் எதிர்வினை இருக்கும்’ என அ.தி.மு.க-வை அண்ணாமலை கடுமையாகச் சாடியிருந்தார். தொடர்ந்து இரு கட்சியினரும் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோரின் உருவப்படங்களை எரித்தனர்.

அதிமுக

இதைத் தொடர்ந்து நடந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு, `பா.ஜ.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்குமிடையே எந்தவித மோதலும் இல்லை. கூட்டணிக் கட்சிகளுக்குள் சிறுசிறு சலசலப்பு இருக்கத்தான் செய்யும். பா.ஜ.க-வுடனான கூட்டணி தொடரும்’ என அ.தி.மு.க தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அ.தி.மு.க தலைவர்கள், நிர்வாகிகள் யாரும் பா.ஜ.க-வையோ அண்ணாமலையையோ விமர்சிக்கக் கூடாது என்று எடப்பாடி தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே தமிழகத்துக்கு வந்த பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ‘அ.தி.மு.க குறித்தோ எடப்பாடி பழனிசாமி குறித்தோ யாரும் விமர்சிக்கக் கூடாது. அவர்களுடன் சுமுகமான உறவை வைத்துக்கொள்ள வேண்டும். இதை தமிழக பா.ஜ.க நிர்வாகிகளும் தொண்டர்களும் பின்பற்ற வேண்டும். மீறினால் கட்சி நடவடிக்கை பாயும்’ என அறிவுறித்திச் சென்றார். ஆனாலும், தொடர்ந்து அ.தி.மு.க., பா.ஜ.க இடையேயான வார்த்தப்போர் முற்றி வருகிறது.

இந்த நிலையில்தான், கூட்டணி குறித்த பா.ஜ.க மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னை அமைந்தகரையிலுள்ள ஐயாவு மஹாலில் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவரிடம் பேசினோம். “ `அ.தி.மு.க-வினர் நம்மைவிட்டு விலகுவதற்கான எல்லா வேலைகளும் செய்து வருகிறார்கள். எனவே அவர்களோடு இனி தொடர்வதா… இல்லை தனித்து நிற்பதா என்பதை நம் கட்டமைப்பை வைத்துதான் முடிவுசெய்ய வேண்டியிருக்கிறது. அதற்காக பூத் அளவில் நாம் உழைக்க வேண்டும். எனவே அ.தி.மு.க உடனான கூட்டணிக்கு நாம் முற்றுபுள்ளி வைக்கும் நேரத்தில் இருக்கிறோம்’ என்று கூட்டணி குறித்து அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது” என்றார்.

“அ.தி.மு.க-வின் இணைப்புக்கான சூழல், அவர்களின் நிலைப்பாடு குறித்து மூன்று மாதங்கள்தான் தமிழக பா.ஜ.க-வுக்கு தேசிய தலைமை அவகாசம் கொடுத்திருக்கிறது” என, இன்று கூட்டத்தில் பேசப்பட்ட கூட்டணி விவகாரத்தின் பின்னணி குறித்துப் பேசினார், தமிழக பா.ஜ.க தலைமைக்கு நெருக்கமான இரண்டாம் கட்ட தலைவர் ஒருவர். மேலும் தொடர்ந்தவர், “மூன்று மாதங்களுக்குள் தமிழகத்தில் பா.ஜ.க-வின் உண்மையான நிலை என்ன என்பது குறித்து அறிக்கை கேட்கப்பட்டிருக்கிறது. அதில் பா.ஜ.க-வின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

ஓ.பன்னீர்செல்வம் – மோடி – எடப்பாடி பழனிசாமி

அதனடிப்படையில் பா.ஜ.க- தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும். அப்படி கட்சியின் வளர்ச்சியில் தொய்வு ஏற்படுமாயின், உடைந்த அ.தி.மு.க-வில் யாரெல்லாம் பா.ஜ.க-வோடு கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறார்களோ அவர்களைப் பயன்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க தேசிய தலைமை ஆலோசனை மேற்கொண்டிருக்கிறது. எனவே இப்போது எங்களுக்கு இருக்கும் ஒரே வேலை தி.மு.க Vs பா.ஜ.க என்கிற போட்டியை உருவாக்க, கட்சியின் கட்டமைப்பை உறுதிப்படுத்த வேண்டும். அதை டெல்லி தலைமை தெளிவாகவும், கண்டிப்புடனும் உத்தரவிட்டிருக்கிறது” என்றார்.

 

Author: அன்னம் அரசு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.