கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், விரைவில் மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று வெளியாகும் செய்திகள் கவலையை ஏற்படுத்தியுள்ளன. மருந்து, உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுசெல்வதில் தடையில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், நடைமுறையில் அது சாத்தியமாகவில்லை என்பதால் இந்தச் சிக்கல் எழுந்திருக்கிறது.
இதனால் சளி, காய்ச்சல் தொடங்கி உயர் ரத்த அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உட்பட பல்வேறு நோய்களுக்கான மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்படலாம் என்று தெரிகிறது. குறிப்பாக, நீரிழிவு நோயாளிகளுக்குத் தேவைப்படும் இன்சுலின், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் தொடர்ந்து எடுக்க வேண்டிய மருந்துகள் போன்றவற்றின் விநியோகம் தடைபடுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
மருந்து, உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுசெல்வதில் தடையில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், நடைமுறையில் அது சாத்தியமாகவில்லை.
வெ.சந்திரமோகன்