அஜித் குமாரின் தந்தை பி.எஸ்.மணி காலமானார்!

14

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார். சமீபத்தில் அ.வினோத் இயக்கத்தில் `துணிவு’ படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு நடிகர் அஜித் குமார் லைகா தயாரிப்பில் படம் நடிப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதற்கிடையில், நடிகர் அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, “லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்குப் பிறகு அஜித் குமார் துவங்க இருக்கும் 2 ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்றுப் பயணத்துக்கு ‘பரஸ்பர மரியாதை பயணம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது” எனச் சமீபத்தில் பதிவிட்டிருந்தார். 

அஜித் குமார் தன் தந்தையுடன்

இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் தந்தை பி.எஸ்.மணி என்கிற சுப்ரமணியம் இன்று காலமானார். அவரின் வயது 85. கடந்த 4 ஆண்டுகளாகப் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இது குறித்து அஜித் குமாரின் குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி (85 வயது) அவர்கள் பல நாள்களாக உடல்நலமின்றி படுக்கையிலிருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளாகப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கரையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அர்ப்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

அஜித் குடும்பத்தினரின் அறிக்கை

இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்புச் செய்தியைப் பற்றி அறியவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களைத் தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை எடுப்பது அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாமல் போவது போன்றவற்றை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.

எங்கள் தந்தையாரின் இறுதிச் சடங்குகளை ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்கவேண்டுமெனக் கருதுகிறோம். எனவே இந்த இறப்புச் செய்தியை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதிச் சடங்குகளைத் தனிப்பட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.” என்று அதில் தெரிவித்துள்ளனர்.

 

Author: நமது நிருபர்

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.